பழங்கால கல்லறைகளை பாதுகாக்கவே தொல்லியல் துறை உள்ளது போல தெரிகிறது என விமர்சித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, பழங்கால சின்னங்களையும் கோயில்களையும் பாதுகாப்பது அதன் கடமை என அறிவுறுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சின்ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ”தஞ்சை பெருவுடையார் கோயில் கிபி 1010 ல் கட்டப்பட்டது மற்றும் ஒரு அண்ட அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நுழைவு கோபுரம் ராஜராஜன் திருவாசல் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோபுரத்தின் அடிப்பகுதி அகலமானது மற்றும் மேற்கு முகத்தின் வலதுபுறத்தில் கீழ் மட்டத்தில் இந்திரனுக்கு துணை சன்னதி உள்ளது. சோழ மன்னன் இராஜ ராஜ சோழனும், மக்களும் இந்திரனை வணங்கி காலை மாலை பூஜைகள் செய்து விழாவைக் கொண்டாடியுள்ளனர். தஞ்சை பெருவுடையார் கோவிலில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திரன் சன்னதி பூட்டியே கிடக்கிறது. இன்று வரை பூஜை மற்றும் வழிபாடு நடத்தப்படாமல் உள்ளதால், பராமரிப்பு இல்லாமல் உள்ளது. எனவே இந்திரன் சன்னதியை திறந்து பராமரித்து தினமும் காலை மாலை வேளைகளில் இந்திரனுக்கு ஆராதனை செய்து வழிபட தேவையான நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஒன்றிய தொல்லியல் துறை பழமை வாய்ந்த கோயில்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை காட்டுவதில்லை. அரியலூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இதன் அருகிலேயே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பிரகதீஸ்வரர் கோவில் பாதிக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது .ஒன்றிய தொல்லியல் துறை கல்லறைகளை பாதுகாக்கவே உள்ளதாக தெரிகிறது. கோயில்களை வருமானம் பார்க்கும் இடமாகவே அரசு பயன்படுத்தி வருகிறது என்றனர். மேலும், மனு குறித்து ஒன்றிய தொல்லியல் துறை மற்றும் , மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.