ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து தொலைபேசியில் கேட்டறிந்த பிரதமர் மோடி!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார். இது தொடர்பாக லதா ரஜினிகாந்த் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி உள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து லதா ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசினார். அப்போது ரஜினிகாந்த் விரைந்து குணம் பெற வேண்டுமென பிரதமர் மோடி தெரிவித்தார்”. எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட மருத்துவ செய்திக் குறிப்பில், ரஜினிகாந்த் செப்டம்பர் 30-ம் தேதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்திலிருந்து வெளியேறும் பிரதான ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை இல்லாத டிரான்ஸ்கேட்டர் முறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மூத்த இதயவியல் மருத்துவர் சாய் சதீஷ், ரஜினியின் இதயத்தில் ஸ்டன்ட் பொறுத்தியுள்ளார்.

திட்டமிட்ட படி அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுள்ளது என்பதை ரஜினி ரசிகர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். ரஜினி நலமுடன் உள்ளார். இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் அடுத்த மூன்று வார காலம் ஓய்வில் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.