பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40% அதிகரிப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி!

பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை அடையாறில் உள்ள காந்தி மண்டபத்தில் நடந்த காந்தி ஜெயந்தி நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். மாநிலம் முழுவதும் உள்ள புகழ்பெற்ற காந்தியவாதிகளை சிறப்பித்த ஆளுநர், காந்தி மண்டபத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர்களையும் சிறப்பித்து, பல்வேறு மாநில அளவிலான விருதுகளை வென்றவர்களுக்கு விருதுகளை ஆளுநர் வழங்கினார். காதி கிராமோத்யோக் பவன் காதி விற்பனையையும் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், தனிப்பட்ட மற்றும் பொது இடங்களில் தூய்மை மற்றும் கடைசி ஆண் மற்றும் பெண் மீது அக்கறை கொண்ட மகாத்மா காந்தியின் காலத்தால் அழியாத கொள்கைகளை வலியுறுத்தினார். ஒரு நிலையான மற்றும் அமைதியான உலகை வளர்ப்பதற்கு இந்தக் கொள்கைகள் முன்பை விட இன்றைக்கு மிகவும் முக்கியமானவை என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் சமூ நீதி என்ற சத்தம் பரவலாக இருந்தாலும், பட்டியலின மக்களுக்கு திகிலூட்டும் கொடுமைகள் இழைக்கப்பட்டு வருவதாக வருத்தம் தெரிவித்த ஆளுநர், கடந்த மூன்று ஆண்டுகளில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது. என்சிஆர்பி தரவுகளின் படி, பட்டியலின பாதிக்கப்பட்டோர் மீதான பாலியல் வல்லுறவு வழக்குகளில் தண்டிக்கப்பட்டோரின் விகிதம் அதிர்ச்சியூட்டும் வகையில் தேசிய சராசரியில் பாதியாக உள்ளது என்று விவரித்தார்.

தொடர்ந்து, “ஒவ்வொரு ஆண்டும், மனிதாபிமானமற்ற முறையில் மனிதர்களைக் கொண்டே மனித கழிவுகளை அள்ளும் பழக்கத்தால் விலைமதிப்பற்ற அப்பாவி தலித் உயிர்கள் இழக்கப்படுவதை நினைத்து வருந்துகிறோம். கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய இடங்களில் நடந்த சோகமான விஷச்சாராய சம்பவங்கள் மூலம் தலித் குடும்பங்கள், சாராய மாஃபியாக்களால் முதன்மையாக பாதிக்கப்படுகின்றனர்” என்றும் அவர் கடுமையாக குற்றம்சாட்டினார்.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பு ஏற்றது முதல் ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் தொடர்ச்சியாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தமிழக அரசை ஆளுநர் நேரடியாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில்தான் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறி தமிழக அரசை சீண்டியுள்ளார்.