சமந்தா – நாகசைதன்யா விவாகரத்துக்கு அரசியல் தலையீடுகளே காரணம் என்று கூறிய தெலங்கானா அமைச்சருக்கு நடிகை சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.
தெலங்கானா சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா சமந்தா நாகசைதன்யா குறித்து தெரிவித்த கருத்துகள் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இருவரது பிரிவுக்கும் தெலங்கானா முன்னாள் அமைச்சரும், சந்திரசேகர் ராவின் மகனுமான கே.டி.ராமாராவ்தான் காரணம் என்று கொண்டா சுரேகா தெரிவித்திருந்தார்.
கொண்டா சுரேகாவின் இந்த கருத்துக்கு தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளர் நடிகர் நாகர்ஜுனா, “அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்துகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள் எதிரிகளை விமர்சிப்பதற்காக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை பயன்படுத்தாதீர்கள். தயவுசெய்து மற்றவர்களின் தனியுரிமையை மதியுங்கள். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்துக்கு எதிரான உங்கள் கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொருத்தமற்றவை மற்றும் தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனடியாக திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.
கொண்டா சுரேகாவுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ஆர் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகை சமந்தா விளக்கமளித்துள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:-
ஒரு பெண்ணாக, வெளியே வந்து பணிபுரிய, பெண்கள் வழக்கமாக போகப் பொருளாக நடத்தப்படும் ஒரு கவர்ச்சிகரமான துறையில் பிழைத்திருப்பதற்காக, காதலில் விழுந்து, அதிலிருந்து வெளியேறி, எழுந்து நின்று சண்டையிடுவதற்காகவும், நிறைய துணிச்சலும், வலிமையும் தேவை.
இந்த பயணம் என்னை எப்படி மாற்றி இருக்கிறது என்பதில் நான் பெருமை அடைகிறேன். தயவு செய்து அதனை சிறுமைப்படுத்திவிடாதீர்கள். ஒரு அமைச்சராக உங்களுடைய வார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தனிநபர்களின் பிரைவசியை மதித்து பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
என்னுடைய விவாகரத்து என்பது தனிப்பட்ட விவகாரம், அது குறித்த ஊகங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய பரஸ்பர சம்மதத்துடனும் இணக்கமாகவும் நடந்த ஒன்று. அதில் எந்த அரசியல் தலையீடுகளும் இல்லை. என்னுடைய பெயரை அரசியல் சண்டைகளில் பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு சமந்தா கூறியுள்ளார்.