தெற்கு டெல்லி பகுதியில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்!

டெல்லியில் ரூ.2,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள 500 கிலோ கோகைன் போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தெற்கு டெல்லியில் உள்ள திலக் நகரில் கடந்த சனிக்கிழமை போலீஸார் சோதனை நடத்தினர். இதில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஹசிமி முகமது வாரீஸ், அப்துல் நயீப் என்ற 2 அகதிகளிடமிருந்து 400 கிராம் ஹெராயின், 160 கிராம் கோகைன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்களுக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து தெற்கு டெல்லியில் போலீஸார் சோதனை நடத்தி 560 கிலோ கொகைன் போதைப் பொருளைகைப்பற்றினர். இவற்றின் மதிப்புரூ.2,000 கோடிக்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள். மணிப்பூர் மற்றும் இதர நான்கு மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு இவர்கள் போதைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்துள்ளனர்.