ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதி போல நடந்துகொள்கிறார் என சட்ட அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.
தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் சென்னை அடையாறில் உள்ள காந்தி மண்டபத்தை சுத்தம் செய்யும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு குப்பைகளை அகற்றி தூய்மைப் பணிகளை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, காந்தி மண்டப வளாகத்தில் பல வகையான பாட்டில்கள் குறிப்பாக, மது பாட்டில்கள் இருப்பதைக் கூட பார்க்க முடிந்தது என்று குறிப்பிட்டதோடு, அது காந்தியின் கொள்கைகளுக்கு எதிரானது, இதை பார்க்கும் பொழுது மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ஆளுநருக்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-
காந்தி மண்டபத்தில் மதுபாட்டிலை பார்த்தது மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆளுநருக்கும் அவரது கேமரா மேன் கண்களுக்கு மட்டும் மது பாட்டில்கள் தெரிந்துள்ளது. ஒரு பாட்டில் கிடக்கிறது, அதனை மதுபாட்டில் என்கிறார். இரவு நேரத்தில் சென்னை மாநகரத்தை தூய்மை செய்யும் பணியை சென்னை மாநகராட்சி சிறப்பாக செய்து வருகிறது.
காந்தி மண்டபம், காமராஜர் நினைவிடங்களில் பகல் நேரத்தில் உள்ள தொழிலாளர்களை கொண்டு சுத்தம் செய்யப்படுவது வழக்கம். அதிகமான குப்பை சேர்கிற மெரினாவைக் கூட சுததமாக வைத்துக்கொள்ளும் அளவுக்கு அரசு செயல்பட்டு வருகிறது. அவருக்கு காந்தி சூதாட்டத்தையும் தடுத்தார் என்பது தெரியும். இந்தியா முழுக்க ஆன்லைன் சூதாட்டங்கள் நடந்து வருகின்றன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மது விலக்குக்கு ஆதரவான அரசு. ஆனால், அனைத்து மாநிலங்களும் ஒன்று சேர்ந்தால் தான் மதுவை ஒழிக்க முடியும். தமிழ்நாடு மட்டும் மதுவை ஒழிக்க முடியாது. மது விலக்கு தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் முதல்வராக ஸ்டாலின் இருப்பார்.
தமிழகத்தில் மதுக்கடைகள் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் திமுகவுக்கு துளியும் கிடையாது. இந்தியா முழுவதும் பாலிசி கொண்டு வந்துதான் மதுவை ஒழிக்க முடியும். அரசியல்வாதி போல் ஆளுநர் செயல்படுகிறார். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமான உறவை துண்டிப்பதாக ஆளுநரின் செயல்பாடு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.