திமுக ஆட்சியில் சமூக அநீதி அலங்கோலங்கள் நாள்தோறும் தொடர்கதையாகி வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
சமூக நீதி என்று பேசிக்கொண்டே சமூக அநீதியை இழைத்திடும் மு.க.ஸ்டாலினின் திமுக ஆட்சியின் அலங்கோலங்கள் நாள்தோறும் தொடர்கதையாகி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆனாங்கூர் பஞ்சாயத்து தலைவர் திருமதி. சங்கீதா, பழங்குடி இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரை நாற்காலியில் அமர விடாமலும், கோப்புகளில் கையெழுத்துப் போட விடாமலும், சாதியரீதியாகத் திட்டி அவமரியாதை செய்வதாக பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் திமுகவினர் மீது குற்றம் சுமத்தி, இன்று 2.10.24(நேற்று) காந்தி ஜெயந்தி நாளில் நடைபெற்ற கிராமச் சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா செய்து தனது எதிர்ப்பை காட்டியுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பட்டியலின மக்களை கிள்ளுக்கீரையாக நடத்தும் அவலநிலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக ஆட்சியில் தொடர்கதையாகி வருவதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.