டாஸ்மாக் கடைகளை மூடினால் முதலில் பாதிக்கப்படுவது சீமான் தான்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!

டாஸ்மாக் கடைகளை மூடினால் முதலில் பாதிக்கப்படுவது சீமான் தான் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி 66 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனையடுத்து, டாஸ்மாக் கடைகளை மூடி முழு மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமாக எழுந்தன. ஆனால், முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டிய சூழல் தற்போது எழவில்லை என தமிழக அரசு தெரிவித்தது. மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என நேற்று மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டை திருமாவளவன் நடத்தியுள்ளார். அதேபோல மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என சீமானும் குரல் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:-

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடினால் பாதிக்கப்படும் பெயர்களில் முதலில் சீமான் பெயர் தான் இருக்கும். அவர் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற அக்கறையினால்தான் மூடவில்லை. அத்துடன், மது விலக்கு என்பதை ஒரு மாநிலத்தில் மட்டும் அமல்படுத்திவிட முடியாது. நாடு முழுக்கவும் அமல்படுத்த முடியாது. ஏனெனில் இந்தியாவில் முழு மது விலக்கு என்பது எப்போதும் இருந்தது கிடையாது. மதுக் கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பது அதிகரித்துவிடும். ஏனெனில் மது குடித்து பழக்கப்பட்ட 80 சதவிகிதம் பேர் அதற்கு அடிமையாக இருக்கிறார்கள். மது அருந்தவில்லை எனில் அவர்களின் உடல்நிலைக்கும் மனநிலைக்கும் பிரச்னை ஏற்படும்.

மதுவினால் ஏற்படும் கேடுகளை எடுத்துச் சொல்லி கடுமையான பரப்புரை மூலமாகவே மது குடிப்பதை தடுக்க முயற்சி செய்ய முடியும். சட்டங்கள் மூலமாக மது விலக்கை கொண்டு வர முடியாது. குஜராத், பீகாரில் மது விலக்கு என்று சொன்னாலும், அங்கு கள்ளச்சாராயம் ஆறு போல ஓடிக்கொண்டு இருக்கிறது. குஜராத்தில் முன்பு கடைகளில் விற்பனை செய்யப்பட்ட சாராயம், தெருவுக்கு தெரு தற்போது விற்பனையாகிறது. ஆகவே, மதுக்கடைகளை மூடுவது சாத்தியம் இல்லை.

அதிமுகவின் வாக்கு வங்கி 25 முதல் 30 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. அதிமுக தொண்டர்கள் 80 சதவிகிதம் வரை உறுதியாக இருந்தாலும், பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் வாக்கு வங்கி சரிந்துவிட்டது.

நடிகர் விஜய்யை நான் என்னுடைய மகனாக பார்க்கிறேன். அவர் இப்போது எல்லோர் வீட்டுப் பிள்ளையாகவே இருக்கிறார். அனைத்து மதம், மொழி, சாதியைச் சேர்ந்தவர்களும் விஜய்யை தங்கள் வீட்டுப் பிள்ளையாக கொண்டாடுகிறார்கள். இந்த நேரத்தில் ஒரு சின்ன வட்டத்தை போட்டுக் கொண்டு அதற்குள் இருக்கப் போகிறேன் என்று அவர் சொன்னால் யார் அதை ஏற்றுக்கொள்வார்கள்? முதலில் எதற்காக அவர் கட்சி ஆரம்பிக்க வேண்டும். நீட் தேர்வு எதிர்ப்பு, பெண் சுதந்திரம் என அவர் பேசும் கொள்கைகள் எல்லாம் காங்கிரஸ், தி.மு.க.விலும் இருக்கின்றன. அவருக்கு பிடித்த கட்சியில் அவர் சேர்ந்துவிடலாமே. அதை விடுத்து ராஜ்ஜியமே இல்லாமல் அவர் எங்கே தனி ராஜ்ஜியம் செய்யப் போகிறார்?. இவ்வாறு இ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.