தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: எச்.ராஜா!

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் எச்.ராஜா கூறினார்.

திண்டுக்கல்லில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற எச்.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திராவிட மாடல் ஆட்சி மக்களுக்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சொத்து வரியை ஏற்கெனவே பல மடங்கு உயர்த்திய பிறகும், ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்களைப் பற்றி அக்கறை இல்லாத அரசாக மாநில அரசு செயல்படுகிறது. ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.3 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஊக்கத்தொகையை நிறுத்தி வைத்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்லும் வகையில், துணை முதல்வராக உள்ள உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்பதில்தான் அவர்கள் அக்கறை செலுத்துகின்றனர்.

உளுந்தூர்பேட்டையில் ஒரு நாடகம் நடைபெற்றது. டாஸ்மாக் கடைகளை திறக்கும் சாவி மாநில அரசிடமும், அதை மூடும் சாவி மத்திய அரசிடமும் உள்ளதாக அந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. இது பெரிய அரசியல் நாடகம். மாநாட்டின்போது பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். இதுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் உண்மையான முகம்.

ஆளுநர் பேசுவதைப் பார்த்து, சட்ட அமைச்சருக்கு கோபம் வருகிறது. ஆளுநர் சரியாகத்தான் பேசிஉள்ளார். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ளன. நடிகர் விஜய் மாநாடு நடத்துவதற்கு எனது வாழ்த்துகள். மாநாட்டில் தனது கட்சியின் கொள்கையைப் பற்றி அவர் கூறட்டும், அதன் பின்னர் அதைப்பற்றி பேசலாம். இவ்வாறு எச்.ராஜா கூறினார்.