இஸ்ரேல்- ஈரான் இடையிலான போர் பதற்றம், லெபனான், சிரியா வரை விரிவடைந்துள்ளது. இதனால் கிட்டத்தட்ட மேற்கு ஆசியா முழுவதுமே போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு கூட்டம் நேற்று அவசரமாக நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில், மேற்கு ஆசியாவில் உள்ள பதற்றம், வர்த்தகம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விநியோகத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் இஸ்ரேல் ராணுவம் ஹிஸ்புல்லா தலைவரை வான்வெளி தாக்குதல் நடத்தி கொலை செய்தது. இதற்குப் பதிலடியாக ஈரான் நேரடியாக கண்டம்விட்டு கண்டம் சென்று தாக்குதல் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி அதிர வைத்தது. ஆனால் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை, அமெரிக்கா தடுத்து நிறுத்தி நடுவானிலேயே வெடிக்க வைத்து, பெரும் பாதிப்பை தடுத்தது. எனினும் போர் பதற்றம் அதிகமாக உள்ளது. தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ஈரான் எண்ணெய் ஆலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது குறித்து விவாதித்து வருகிறது. இதுதவிர, லெபனான், சிரியா மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இஸ்ரேல்- ஈரான், லெபனான், சிரியாவை தாண்டி தற்போது துருக்கி வரை பதற்றமான நிலை நீடிக்கிறது.
இந்த சூழலில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் அடங்கிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு நேற்று அவசரமாக கூடியது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே உருவாகி உள்ள் போர் பதற்றங்கள், இஸ்ரேல் மீது ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு தீவிரமான நிலை குறித்து பாதுகாப்பு அமைச்சரவை குழு விரிவாக விவாதித்தது. ஈரான்- இஸ்ரேல் இடையிலான தற்போதைய மோதல் போக்கு, மேற்கு ஆசியா முழுவதுமே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த பதற்றத்தால் நாட்டின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
வணிகம், போக்குவரத்து, கச்சா எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் இராஜதந்திரம் மற்றும் உரையாடல் மூலமாக அனைத்துப் பிரச்சினைகளையும் அவசரமாகத் தீர்க்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி உள்ளது. தற்போதைய மோதல் ஒரு பிராந்தியம் முழுவதுமான போராக எந்த நிலையிலும் மாறிவிடக்கூடாது எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுபற்றி கூறுகையில், மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமையை இந்தியா ‘உறுதியாக கண்காணித்து வருகிறது’. கடந்த செவ்வாயன்று, வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவில் உள்ள கார்னகி எண்டோவ்மென்ட்டில் தனது உரையின் போது மத்திய கிழக்கில் தற்போதைய நெருக்கடி குறித்து தனது அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தார். சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான தொடர்பை எளிதாக்குவதில் இந்தியா ஒரு பங்கை வகிக்க முடியும் என்று ஜெய்சங்கர் கூட்டத்தில் பரிந்துரை செய்தார். அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை “பயங்கரவாத தாக்குதல்” என்றே குறிப்பிட்டார். அதேநேரம் இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு எந்தவொரு தேசமும் பதிலடி கொடுக்கும் போது, சர்வதேச மனிதாபிமான சட்டத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காத அல்லது முடிந்தவரை அப்பாவிகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.