மதுரை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்: சு.வெங்கடேசன்!

மதுரை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு உரிய அனுமதி வழங்கி நிதியை ஒதுக்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை விமான நிலையம் அக்.1-ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் சேவை தொடங்கியதையொட்டி, உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் இயக்குவது குறித்து ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் மதுரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விமான நிலைய அலுவலர்கள், விமான நிறுவனங்கள் பிரதிநிதிகள், சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் சு.வெங்கடேசன் கூறியதாவது:-

இந்திய விமான நிலையங்களில் அதிக பயணிகளை கையாள்வதில் 32-ஆவது இடத்தில் உள்ள மதுரை விமான நிலையம் தற்போது, 24 மணி நேரமும் செயல்பட துவங்கி உள்ள நிலையில், அடுத்த மூன்று மாதங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று விமான நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மதுரை விமான நிலையம் பெரிய பலனை அடையும் என கூறப்படுகிறது. மதுரை, தென்மாவட்டங்களின் 25 ஆண்டு கால கனவு நிறைவேறியுள்ளது. விமான நிறுவனங்கள் முயற்சி மதுரையின் தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்கு மிகப் பெரிய உறுதுணையாக இருக்கும்.

மதுரை மெட்ரோ திட்டத்திற்கு அடுத்த நிதிநிலை அறிக்கையிலாவது மத்திய அரசு உரிய அனுமதி வழங்கி நிதியை ஒதுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். மதுரை மெட்ரோவுக்கு மதுரையைச் சேர்ந்தவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன் கூடுதலாக பங்களிப்பை செய்வார் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நிச்சயமாக அது நிறைவேறும் என நம்புகிறோம். மேலும் விமான நிலையம், ரயில் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்க தமிழ் தெரியாத யாரையும் நியமிக்கக் கூடாது. ஹிந்தி தெரிந்தவர்களை மட்டும் நியமிப்பது கட்டணம் வசூலிப்பதற்கான ஒரு யுக்தி. இவ்வாறு அவர் கூறினார்.