தமிழ்நாடு போலீசார் போதை பொருட்களை பிடிப்பதே இல்லை: ஆளுநர் ரவி!

தமிழ்நாடு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கஞ்சாவை மட்டுமே பிடிப்பதாகவும் பிற போதைப் பொருட்களை ஒரு கிராம் கூட பிடித்தாக தகவல் இல்லை என்றும் ஆளுநர் ரவி கடுமையாக விமர்சித்தார்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவிலில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, பல விஷயங்கள் குறித்தும் பேசினார். குறிப்பாகத் தமிழ்நாடு போதை தடுப்பு பிரிவினரைக் கடுமையாக விமர்சித்த அவர், போதைப் பொருட்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் இல்லை என்று விமர்சித்தார். ஆளுநர் ரவி மேலும் பேசியதாவது:-

நமது நாடு இப்போது நவராத்திரியைக் கொண்டாடி வருகிறது. தீய சக்தியை அழித்ததைக் கொண்டாடும் விழா தான் இந்த நவராத்திரி விழா.. இதில் தினமும் இரவில் நவராத்திரி விழா பூஜைகள் நடத்தப்படும். ஆளுநர் மாளிகையிலும் இப்போது இந்த பூஜைகளை நடத்தி வருகிறோம்.

இப்போது நமது நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு மிகப் பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது. உதாரணத்திற்குப் பஞ்சாபை எடுத்துக் கொள்ளுங்கள். 40 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் எல்லா துறைகளில் சிறந்து விளங்கியது. ஆனால், இப்போது நிலைமையைப் பாருங்கள்.. போதை பழக்கத்தால் சீர்குலைந்து மிக மோசமான நிலையில் இருக்கிறது. இப்படி நாட்டின் போதை பழக்கத்தால் சிதைந்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரசாயனம் மற்றும் கஞ்சா மட்டுமே பிடிக்கப்படுகிறது. இது குறித்த தகவல்கள் மட்டுமே வருகிறது. ஆனால், கஞ்சா தவிர்த்து மற்ற போதைப் பொருட்களை இதுவரை தமிழ்நாடு போலீசார் பறிமுதல் செய்து நான் பார்த்ததே இல்லை. பிற போதைப் பொருட்களை மத்திய அமைப்புகள் மட்டுமே தமிழகத்தில் பறிமுதல் செய்துள்ளனர்.

போதைப் பொருள் கிடங்குகள் பாகிஸ்தான், துபாய், தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் தான் செயல்படுகிறது. ஆனால், கஞ்சா தவிர்த்து மற்ற போதைப் பொருட்களை மாநில போதை தடுப்பு பிரிவினரால் பிடிக்க முடிவதில்லை. ஒரு கிராம் கூட மற்ற போதைப் பொருட்களைப் பிடித்தாக தகவல் இல்லை. மறுபுறம் மத்திய நிறுவனங்கள் இதில் சிறந்து செயல்பட்டு வருகிறது. தொடர்ச்சியாகச் சோதனைகள், ரெய்டுகளை நடத்திப் பல டன் கணக்கில் போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்கிறது. நமது சமூகத்தைச் சுத்தப்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகளை நமக்குத் தேவை.

பெற்றோர்- குழந்தைகள் இப்போது ஒன்றாக நேரம் செலவழிப்பது தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது. ஒரே ரூமில் இருந்தாலும் கூடப் பெற்றோரும் குழந்தைகளும் ஒன்றாக நேரத்தைச் செலவிடுவதில்லை. தங்கள் செல்போன்களையே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.. பெற்றோர்கள் தான் குழந்தைகளின் முதல் பொறுப்பாளர்கள். எனவே, குழந்தைகளுடன் பெற்றோர் செலவு செய்வது அவசியம். அப்போது தான் குழந்தைகள் தவறான பாதையில் செல்லாமல் தடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.