விமான சாகச நிகழ்ச்சியில் மக்கள் கூட்டத்தை கண்காணிக்க தமிழக காவல் துறை தவறியதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சென்னையில் விமான சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் உற்சாகத்தோடு கடற்கரை நோக்கி திரண்டது மகிழ்ச்சி என்றால், அந்த மக்களின் உற்சாகத்தை, ஆர்வத்தை உணராமல் அரசு நிர்வாகம் செயலிழந்து போனதை கண்டு வருத்தம் ஏற்படுகிறது. ரயில் நிலையங்களில், பேருந்துகளில், மாநகர சாலைகளில் மக்கள் வெள்ளம் பெருகி வழிந்ததை சென்னை காவல்துறை கணிக்க தவறியது அதிர்ச்சி அளிக்கிறது. இது முழுக்க முழுக்க உளவுத்துறையின் தோல்வி என்றால் அது மிகையாகாது.
திட்டமிடத் தெரியாத அரசு நிர்வாகம், மக்களின் நாடித்துடிப்பை அறியாது செயல்பட்டிருப்பது வெட்கக்கேடு. மக்கள் கூட்ட நெரிசலில், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்ததை கண்டு மாநகராட்சி நிர்வாகம் தலைகுனிந்து நிற்க வேண்டும். அனைத்தையும் தாண்டி, இந்திய விமானப் படையின் சாகசங்களை மக்கள் கண்டு ரசித்ததும், நம் விமானப்படையின் பலத்தை உணர்ந்ததும் மிகச்சிறப்பு. இனி வரும்காலங்களில் அரசும், காவல்துறையும் விழிப்போடு பணியாற்றி இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை முன்னரே அறிந்து ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.