தென்னிந்திய மாநிலங்களிலும் மது ஒழிப்பு மாநாடு நடத்த திட்டம்: திருமாவளவன்

ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலும் மது ஒழிப்பு மாநாடு நடத்த திட்டமிட்டிருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.

இதுதொடர்பாக சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

கள்ளக்குறிச்சியைத் தொடர்ந்து ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களிலும் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாட்டை நடத்துவதற்கும் திட்டமிட்டு வருகிறோம். இதுகுறித்து விரிவாக விவாதிப்பதற்கு வரும்10-ம் தேதி விசிகவின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

மறைந்த தலைவர் ராஜாஜியின் நிலைப்பாடுகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அவரது மதுவிலக்கு சட்டம் வரவேற்கக் கூடியது. அகில இந்திய அளவில் முதன்முதலாக மது விலக்கு சட்டத்தை கொண்டு வந்து நடைமுறைபடுத்தியவர் ராஜாஜி என்பது மறைக்க முடியாத,மறுக்கமுடியாத வரலாற்று உண்மையாகும். இதையொட்டியே மது ஒழிப்பு மகளிர் மாநாட்டை நடத்திய விசிக கட்சி, அந்த களத்திலே அவரை அடையாளப்படுத்தியது. அவ்வளவுதான். இதனை சிலர் ஊதிபெருக்கி விசிகவுக்கு எதிராக எதிர்மறை விமர்சனங்களாக செய்கின்றனர். இது வழக்கமான ஒன்றுதான். அதை பொருட்படுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.