உதயநிதி டி-ஷர்ட் அணிந்து அரசு விழாக்களில் கலந்துகொள்வதாக குற்றம்சாட்டிய ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார்.
அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் இறுதியில் துணை முதல்வராக நியமனம் செய்யப்பட்டார். முன்பு வெள்ளை சட்டை மற்றும் பேண்ட் அணிந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார் உதயநிதி ஸ்டாலின். கரை வேட்டி அணிவதில்லை என்பதால் அதற்கு பதிலாக, சட்டை பாக்கெட்டில் திமுகவின் சின்னமான உதயசூரியன் இருக்கும். தற்போது பெரும்பாலும் திமுக சின்னம் மற்றும் கொடி பொருத்தப்பட்ட, வெள்ளை நிற டி ஷர்ட் அணிந்தே உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஆனால், அரசு நிகழ்ச்சிகளில் எப்படி டி ஷர்டுடன் பங்கேற்கலாம் என்ற கேள்வியை அதிமுக எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “நாமெல்லாம் நண்பர்களுடன் சேர்ந்து செல்லும்போது, விளையாடும் போது டி ஷர்ட் அணிந்து செல்வோம். அரசு நிகழ்சிகளுக்கு செல்லும் போது யாராவது டி ஷர்ட் அணிந்து செல்வார்களா? உலகத்திலேயே அரசு நிகழ்ச்சிக்கு டி ஷர்ட்டில் சென்றது உதயநிதி ஸ்டாலின் மட்டும்தான். டி ஷர்ட் அணிவது தவறு என்று நான் சொல்லவில்லை. கட்சி நிகழ்ச்சி உள்பட மற்ற நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்லுங்கள். அதிலும் கட்சி கொடி மற்றும் உதயசூரியன் சின்னத்துடன் டி ஷர்ட் அணிந்து உதயநிதி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது ஏற்புடையது அல்ல” என்று குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “உதயநிதி ஸ்டாலின் டி ஷர்ட் அணிந்து அரசு நிகழ்ச்சிக்கு வருவது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாராளமாக வழக்கு தொடர்ந்து கொள்ளட்டும். ஆனால், ஜெயலலிதா படம் போட்ட பெரிய பெரிய டாலர்களை அதிமுக அமைச்சர்களாக இருந்தவர்கள் போட்டுக்கொண்டு வந்தார்களே. அதற்கு என்ன செய்வது?
அப்படிப் பார்த்தால் யாரும் கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை கொண்ட அதிமுகவின் கரை வேட்டியைக் கட்டக் கூடாதே. ஜெயக்குமார், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அதிமுக கரை வேட்டி அணிந்துதானே வருகிறார்கள். சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதா படத்தை வைத்துக்கொண்டு தானே வருகிறார்கள். ஆக, இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமானது. டி ஷர்ட் அணியக் கூடாது என்ற சட்டம் இருந்தால் அதனை அமல்படுத்துவதற்கு தயாராகவே இருக்கிறோம்” என்று பதில் அளித்தார்.