திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 9 மாத குழந்தை உட்பட மூவர் பலி!

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருமாநல்லூர் சாலையில் உள்ளது பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 9 மாத குழந்தை உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். நாட்டு வெடிகுண்டு எப்படி தயாரிக்கப்பட்டது, யார் தயாரித்தனர் என்பது குறித்து போலீஸார் விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருமாநல்லூர் சாலையில் உள்ள பாண்டியன் நகர், சத்யா காலனி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவருக்கு அப்பகுதியில் சொந்தமான வீடு உள்ளது. இந்நிலையில், கார்த்தி அங்குள்ள கோயில் விசேஷங்களுக்குப் பயன்படுத்தப்படும் பட்டாசு நாட்டு வெடிகளை தயாரித்து கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று மதியம் திடீரென அதிக சப்தத்துடன் வெடிச்சத்தமானது கேட்டுள்ளது. இதில், கார்த்தி என்பவரது வீடு முழுவதுமாக தரைமட்டமாக சேதமடைந்துள்ளது. அந்த கட்டடத்துக்குள் 10 நபர்கள் இருந்துள்ளனர். அதில், மூவர் குழந்தைகள். இந்நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகே உஉள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வெடி விபத்தில் 9 மாத குழந்தை உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அந்த வீட்டில் இருந்தவர்கள் அனைவருமே வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று முதல்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. இந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் கார்த்தி என்பவரது வீடு சேதம் அடைந்தது மட்டுமின்றி எதிரில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள் முழுவதும் சேதம் அடைந்துள்ளன.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமுருகன் பூண்டி போலீசார் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இங்கு ஏராளமான நாட்டு வெடிகள் வெடிக்காத நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி வேறு எங்கேனும் நாட்டு வெடிகள் சிதறி கிடக்கின்றனவா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த விபத்து எப்படி நடந்தது, நாட்டு வெடிகுண்டு எப்படி தயாரிக்கப்பட்டது உள்ளிட்டவை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் திருவிழாவிற்கு பயன்படுத்தும் நாட்டு பட்டாசுகள் தயாரிக்கும் போது விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.