தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், சென்னை மாநகரத்தின் எந்தப் பகுதியிலும் வெள்ளத்தடுப்புப் பணிகள் நிறைவடைந்ததாகத் தெரியவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், சென்னை மாநகரத்தின் எந்தப் பகுதியிலும் வெள்ளத்தடுப்புப் பணிகள் நிறைவடைந்ததாகத் தெரியவில்லை. நடப்பு ஆண்டில் இயல்பை விட அதிகமாக வடகிழக்குப் பருவமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், அது குறித்த எந்த அக்கறையுமின்றி, மழைநீர் வடிகால்களை சீரமைக்கும் பணி உள்ளிட்ட வெள்ளத்தடுப்பு பணிகளை அரசு மிகவும் அலட்சியமாக மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.
சென்னை மாநகரம் கடந்த பத்தாண்டுகளாகவே ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழையின் போது பேரிடர்களை எதிர்கொள்வது வாடிக்கையாகி விட்டது. 2021 ஆம் ஆண்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மழை வெள்ள பாதிப்புகள் அதிகரித்து விட்டது. வெள்ளத்தடுப்புப் பணிகள் சரிவர மேற்கொள்ளப் படாதது தான் இதற்குக் காரணம் ஆகும். 2021 ஆம் ஆண்டில் மிக மோசமான வெள்ளத்தையும், உயிரிழப்பு மற்றும் உடமையிழப்புகளையும் சென்னை மாநகரம் எதிர்கொண்டது. அதைத் தொடர்ந்து சென்னையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளராக பணியாற்றிய இ.ஆ.ப. அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுனர் குழுவை அரசு அமைத்தது. அந்தக் குழு அதன் இடைக்கால அறிக்கையை 2022- ஆம் ஆண்டு மே மாதத்திலும், இறுதி அறிக்கையை 2023- ஆம் ஆண்டு மார்ச் 14 -ஆம் தேதியும் தமிழக அரசிடம் தாக்கல் செய்தது.
திருப்புகழ் குழு பரிந்துரைப்படி வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், கடந்த ஆண்டு சென்னையில் எந்த இடத்திலும் வெள்ள நீர் தேங்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர்களும் கூறினார்கள். ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத் தொடக்கத்தில் செய்த மழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது; நூற்றுக்கணக்கான மகிழுந்துகள் அடித்துச் செல்லப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்கள் கோபத்தின் உச்சிக்கு சென்ற நிலையில், குடும்பத்துக்கு ரூ.6000 இழப்பீடு வழங்கி அவர்களின் கோபத்தைத் தணிக்க தமிழக அரசு முயன்றது. இந்த ஆண்டும் அத்தகைய நிலை ஏற்படாமல் சென்னை மாநகர மக்கள் பேரிடரை எதிர்கொள்ளாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும்.
சென்னையில் வெள்ளத்தடுப்புப் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டிருப்பதால், இந்த ஆண்டில் 20 செ.மீ மழை பெய்தாலும் நகருக்குள் மழை நீர் தேங்காது என்று கடந்த ஆண்டு பேசிய வசனத்தையே இந்த ஆண்டும் அமைச்சர் பெருமக்கள் பேசி வருகின்றனர். ஆனால் சென்னையில் கடந்த செப்டம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் 7.42 செ.மீ மழை பெய்ததற்கே பெரும்பான்மையான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போலத் தேங்கி நின்றது. அதன்பின் இரு வாரங்களாகியும் வெள்ளத்தடுப்புப் பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் வடகிழக்கு பருவமழையை நினைத்து சென்னை மக்கள் அஞ்சுகின்றனர். சென்னையில் வேளச்சேரி, தரமணி, ஈக்காட்டுத்தாங்கல், விருகம்பாக்கம், நெற்குன்றம், வளசரவாக்கம், இராமாபுரம், ஆலப்பாக்கம், திருவி.க. நகர், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட 45 க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் வடிகால்களை இணைக்கும் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. பல கி.மீ தொலைவுக்கான வடிகால் இணைப்புப் பணிகளை வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முடிப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
மேலும் கடந்த ஆண்டில் 200 க்கும் மேற்பட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், நடப்பாண்டில் அந்த இடங்களில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க எந்த வகையான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப் பட்டாலும் அவை இன்னும் முடிக்கப்படவில்லை. வெற்று வார்த்தைகளிலும், வீண் விளம்பரங்களிலும் மட்டுமே கவனம் செலுத்தும் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் சென்னையில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ளவில்லை. இதே நிலை தொடர்ந்தால் சென்னை மாநகர மக்கள் நடப்பாண்டும் பேரிடரையும் பெருந்துயரையும் எதிர்கொள்வதை எவராலும் தடுக்க முடியாது.
மழை என்பது மகிழ்ச்சியானது; அனுபவித்து ரசிக்க வேண்டியது. ஆனால், ஆட்சியாளர்களின் திறமை இன்மை, தொலைநோக்குப் பார்வையின்மை, வெள்ளத்தடுப்புப் பணிகளில் கூட ஊழல் போன்றவற்றால் வடகிழக்குப் பருவமழை என்றாலே அஞ்சி நடுங்கும் நிலைக்கு சென்னை மாநகர மக்கள் தள்ளப்பட்டு இருப்பது பெருந்துயரமாகும். இந்த அவல நிலைக்கு நடப்பாண்டிலாவது அரசு முடிவு கட்ட வேண்டும். வடகிழக்குப் பருவமழை வரும் 15 ஆம் தேதி தொடங்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள்ளாக போர்க்கால அடிப்படையில் வெள்ளத்தடுப்புப் பணிகளை சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் நிறைவு செய்ய வேண்டும். இன்னொரு பேரிடரில் இருந்து மக்களைக் காக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.