டெல்லி முதலமைச்சர் அதிஷியின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். டெல்லி முதல்வராக அதிஷி பொறுப்பேற்ற பிறகு நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு குடியேறிய நிலையில் இன்று அவரது உடைமைகளை அகற்றி பொதுப்பணித்துறையினர் சீல் வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தார். இவர் டெல்லி புதிய மதுபான கொள்கையில் அமலாக்கத்துறை, சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இருப்பினும் டெல்லி முதல்வர் அலுவலகம் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து டெல்லியின் புதிய முதல்வராக ஆம்ஆத்மி கட்சியின் அதிஷி பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
பொதுவாக டெல்லி முதல்வராக செயல்படுவோருக்கு அரசு சார்பில் அதிகாரப்பூர்வ இல்லமாக பங்களா என்பது வழங்கப்படும். அதன்படி டெல்லி சிவில் லைனில் உள்ள பிளாக்ஸ்டாப்ஸ் ரோட்டில் உள்ள முதல்வரின் அதிகாரப்பூர்வ பங்களாவில் அதிஷி குடியேற முடிவு செய்தார். நேற்று முன்தினம் அதிஷி அந்த பங்களாவில் குடியேறினார். இந்த பங்களாவில் தான் கடந்த 9 ஆண்டுகளாக அரவிந்த் கெஜ்ரிவால் வசித்து வந்தார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் பங்களாவை காலி செய்த நிலையில் அதிஷி அந்த பங்களாவில் 2 நாட்களுக்கு முன்பு குடியேறினார். பங்களாவில் அவரது உடைமைகள் உள்பட அனைத்து பொருட்களும் கொண்டு வந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் தான் இன்று திடீரென்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த பங்களாவில் உள்ள அதிஷியின் உடைமைகளை அகற்றி வெளியே வைத்துவிட்டு திடீரென்று சீல் வைத்துள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிஷி முதல்வராக இருக்கும் நிலையில் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் வைக்கப்பட்ட பொருட்களை அகற்றி சீல் வைக்கப்பட்ட சம்பவம் ஆம்ஆத்மி கட்சியினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இத்தகைய சூழலில் தான் டெல்லி முதல்வர் அலுவலகம் சார்பில் பரபரப்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல்வர் அதிஷியின் அதிகாரப்பூர்வ பங்களா விவகாரம் பற்றி கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில், ‛‛டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா முக்கிய பாஜக தலைவருக்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளார். அவரது உத்தரவின்பேரில் தான் அந்த இல்லத்தில் இருந்த பொருட்கள் அகற்றப்பட்டுள்ளது” என கூறியுள்ளார். இருப்பினும் இந்த குற்றச்சாட்டுக்கு துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா மற்றும் பாஜக தரப்பில் இருந்து இன்னும் எந்த பதிலும் வரவில்லை.