பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, நேற்று புதன்கிழமை அன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்தத் தகவலுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார் ரத்தன் டாடா. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் வயோதிகத்தால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் புதன்கிழமை இரவு காலமானார்.
டாடா குழுமத் தலைவராக இருந்து, அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா. மும்பையில் புகழும் வளமும் மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். டாடா குழும நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரன். 1962-ல் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பி.எஸ்சி. பட்டம், 1975-ல் ஹார்வர்டு வணிகக் கல்லூரியில் உயர் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.
1962-ல் டாடா குழுமத்தில் இணைந்தார். 1971-ல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த தி நேஷனல் ரேடியோ அண்ட் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனி நிறுவனத்தின் (Nelco) பொறுப்பு இயக்குநராக பொறுப்பேற்றார். இவரது ஆலோசனைகளால் நெல்கோ மீண்டது. 1991-ம் ஆண்டு ஜே.ஆர்.டி.டாடாவிடம் இருந்து டாடா குழுமத் தலைவர் பொறுப்பை ஏற்றார். பல புதிய திட்டங்களைப் புகுத்தி நிறுவனத்தின் வருமானத்தை 10 மடங்கு உயர்த்தினார். கோரஸ், ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களை டாடா குழுமம் வாங்கியது. பங்குச் சந்தையில் மிக அதிக சந்தை முதலீடு கொண்டதாக டாடா குழுமம் திகழ்கிறது. இவரது வழிகாட்டுதலில் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் பொது நிறுவனமானது. நியூயார்க் பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது.
நடுத்தரக் குடும்பத்தினர் ஒரு பைக்கில் 4 பேராக கஷ்டப்பட்டுப் போவதைப் பார்க்கும்போதெல்லாம், குறைந்த விலையில் சிறிய கார் தயாரிக்க வேண்டும் என்ற உந்துதல் இவரிடம் ஏற்பட்டது. இந்த கனவு, ‘டாடா இண்டிகா’ வடிவில் 1998-ல் நிஜமானது. உலகிலேயே மலிவாக ரூ.1 லட்சத்துக்கு கார் வெளியிடுவதாக அறிவித்தார். ‘டாடா நானோ’ கார் 2008-ல் உற்பத்தியாகி வந்தபோது அதன் செலவு அதிகரித்துவிட்டது. ஆனாலும், விலையை உயர்த்த மறுத்துவிட்டார்.
இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய தொழிலதிபர் இவர். பிரதமரின் வணிகம் மற்றும் தொழில்கள் தொடர்பான குழுவில் உறுப்பினராக இருந்தவர். பல்வேறு வெளிநாட்டு அறக்கட்டளைகளுக்கு அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்தவர். பில்கேட்ஸ் நிறுவனத்தின் இந்திய எய்ட்ஸ் திட்டக் குழுவிலும் இருந்தவர்.
பத்மபூஷண், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவக் குடிமகன் அந்தஸ்து, பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய கவுரவங்களைப் பெற்றுள்ளார். டைம் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு படைத்த 100 பேர் பட்டியல் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றவர். 2012 வரை டாடா குழுமத் தலைவராக இருந்த இவர் தற்போது டாடா குழும அறக்கட்டளைகளின் தலைவராக இருந்து வழிநடத்தியவர்.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:-
ரத்தன் டாடாவின் மறைவால், கார்ப்பரேட் வளர்ச்சியின் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்பிய, நெறிமுறைகளுடன் சிறந்து விளங்கிய ஒரு ஆளுமையை இந்தியா இழந்துவிட்டது. பத்ம விபூஷன் மற்றும் பத்ம பூஷன் விருதுகளைப் பெற்ற அவர், டாடாவின் பெருமையை உலகளாவிய அளவிற்கு கொண்டு சென்றார். அவர் அனுபவமிக்க தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். தொண்டு மற்றும் சேவை ஆகியவற்றில் அவரது பங்களிப்பு விலைமதிப்பற்றது. அவரது குடும்பத்தினருக்கும், டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும், அவர் மீது பெருமதிப்பு கொண்டவர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:-
ரத்தன் டாடாவுடன் நான் மேற்கொண்ட எண்ணற்ற சந்திப்புகள் என் மனதில் நிறைந்திருக்கின்றன. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது குஜராத்தில் அவரை அடிக்கடி சந்திப்பேன். பல்வேறு விவகாரங்களில் கருத்துகளை பரிமாறிக்கொள்வோம். அவருடைய சிந்தனைகள் மிகவும் செழுமையாக இருந்ததைக் கண்டேன். நான் டெல்லி வந்தபோதும் இந்த சந்திப்புகள் தொடர்ந்தன. அவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர் மீது நன்மதிப்பு கொண்டவர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ரத்தன் டாடா தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர். அவர் வணிகம் மற்றும் தொண்டு ஆகிய இரண்டிலும் அழியாத முத்திரையை பதித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், டாடா குழுமத்தினருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்தியாவின் விலைமதிப்பற்ற மகனை இழந்துவிட்டோம். இந்தியாவின் உள்ளார்ந்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்புடன் ரத்தன் டாடா செயலாற்றினார். அவர் லட்சக் கணக்கான மக்களுக்கு ஒரு உத்வேகமாகவும், அடையாளமாகவும் இருந்தார். தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை வழங்கினார். அவரது அன்புக்குரியவர்களுக்கும், அன்பர்களுக்கும் எமது அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்தியாவை சிறந்த நாடாக உருவாக்க ஆழ்ந்த அக்கறையுடன் இருந்தவர் என தெரிவித்து உள்ளார். தொடர்ந்து அவர், கூகுள் நிறுவனத்தில் வைத்து கடைசியாக அவரை சந்தித்து பேசும் சந்தர்ப்பம் அமைந்தது. வெய்மோவின் முன்னேற்றம் பற்றி நாங்கள் பேசினோம். அவருடைய தொலைநோக்கு பார்வை கேட்பதற்கு ஊக்கமளிக்கும் வகையில் இருந்தது. அவர், ஒரு அசாதாரண வர்த்தகம் மற்றும் கொடைத்தன்மைக்கான மரபை விட்டு சென்றிருக்கிறார். இந்தியாவில் நவீனத்துவ தொழிலை வழிநடத்தி செல்வதற்கும், மேம்படுத்துவதற்கும் ஏதுவாக உதவியாக இருந்தவர் என்று தெரிவித்து உள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
ரத்தன் டாடாவின் மறைவு வேதனையளிக்கிறது. அவர் இந்திய தொழில்துறையின் உண்மையான பலமாகவும், பணிவு மற்றும் இரக்கத்தின் கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்தார். அவரது தொலைநோக்கு தலைமை டாடா குழுமத்தை வடிவமைத்தது மட்டுமல்லாமல், வணிக நெறிமுறைகளுக்கான உலகளாவிய அளவுகோலையும் அமைத்தது. தேசத்தைக் கட்டியெழுப்புதல், கண்டுபிடிப்புகள் மற்றும் தொண்டு ஆகியவற்றில் அவரது இடைவிடாத அர்ப்பணிப்பு லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் அழியாத முத்திரையை பதித்துள்ளது.
இந்தியா ஒரு பிரம்மாண்டத்தை இழந்துவிட்டது. ஆனால் ரத்தன் டாடா விட்டுச்சென்ற மரபுகள் எதிர்வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும். இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும், ஒட்டுமொத்த டாடா குழுமத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
