திருச்சியில் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கிய விமானி!

திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு நேற்று மாலை புறப்பட்ட விமானத்தில் தொழில்நுடப் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமடித்த விமானம் மீண்டும் பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில், விமானிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த விமானத்தில் 141 பயணிகள் இருந்தனர். முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் மக்கள் விமானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், “ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதை அறிந்து நிம்மதி அடைந்தேன். தரையிறங்குவதில் சிக்கல் என்ற தகவல் கிடைத்ததும், அலுவலர்களுடன் உடனடியாக தொலைபேசி வாயிலாக அவசரக் கூட்டத்தைக் கூட்டி, தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவ உதவிகள் எனத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தயார் நிலையில் வைத்திட அறுவுறுத்தி இருந்தேன்.

பயணிகள் அனைவரும் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யவும், அவர்களுக்கு மேற்கொண்டு தேவைப்படும் உதவிகளை வழங்கவும் மாவட்ட ஆட்சியரிடம் தற்போது கூறியுள்ளேன். பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கிய விமானி மற்றும் விமானக் குழுவினருக்கும் எனது பாராட்டுகள்!” என அதில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சுமார் ஆறு மணி நேர தாமதத்துக்கு பிறகு வேறொரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிகள் ஷார்ஜா புறப்பட்டனர். அதில் 109 பயணிகள் பயணித்தனர். 35 பயணிகள் அச்சம் காரணமாக பயணத்தை தவிர்த்து விட்டனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.