மகாராஷ்டிராவில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் படுகொலை சம்பவமானது அம்மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி ஆட்சியின் கீழ் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்து போய்விட்டது என்பதையே அப்பட்டமாக காட்டுகிறது என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா காங்கிரஸ் முகமாக இருந்த பாபா சித்திக் பின்னர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு தாவினார். அஜித் பவார் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவரான பாபா சித்திக் நேற்று மும்பை பாந்திரா கிழக்கு பகுதியில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். பாபா சித்திக் படுகொலை தொடர்பாக நிழல் உலக தாதா லாரன்ஸ் கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்கிற நிலையில் பாபா சித்திக் படுகொலை பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 3 முறை காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக, காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் பாபா சித்திக். அண்மையில்தான் காங்கிரஸில் இருந்து விலகி அஜித் பவார் தேசியவாத காங்கிரஸில் இணைந்திருந்தார். பாபா சித்திக் படுகொலை சம்பவம் மகாராஷ்டிரா அரசியலை உலுக்கியிருக்கிறது.
பாபா சித்திக் படுகொலைக்கு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, பாபா சித்திக் படுகொலை சம்பவம் மிகவும் துயரமானது. இந்த துயரமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக இருக்கிறோம். மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருக்கிறது என்பதையே இந்த கொடூர சம்பவம் வெளிப்படுத்துகிறது. மகாராஷ்டிரா அரசுதான் இந்த படுகொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என சாடியுள்ளார்.
ராகுல் காந்தியின் இந்த விமர்சனத்துக்கு பாஜக தரப்பில் பதிலடி தரப்பட்டுள்ளது. பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறுகையில், பாபா சித்திக்கை படுகொலை செய்தவர்களில் 2 பேர் உடனடியாகவே கைது செய்யப்பட்டுள்ளன. 3-வது கொலையாளியை கைது செய்யவும் மகாராஷ்டிரா தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. படுகொலை நிகழ்ந்து 24 மணிநேரத்திலேயே குற்றவாளிகளை கைது செய்துவிட்டது மகாராஷ்டிரா அரசு. எவர் ஒருவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிட முடியாது என்றார்.