தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்மாநாட்டை ஒருங்கிணைக்க 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகத்தின் முதல்மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை\யில் அமைந்துள்ள வி.சாலை என்ற கிராமத்தில் நடக்கிறது. இதன்படி 85 ஏக்கர் நிலத்தை மாநாடு நடத்துவதற்கு அக்கட்சியினர் தேர்வு செய்தனர். இங்கு மாநாடு நடத்த காவல்துறை அனுமதி வழங்கிய நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு அக்.27-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு, தொண்டர்களும் பொதுமக்களும் மாநாட்டுக்கு வருமாறு பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அழைப்புவிடுத்து வருகிறார். இக்கூட்டங்களில் மாநாட்டை ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும் பொறுப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மாநாட்டுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்கள் குறித்து பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கட்சித் தலைவர் அறிவித்தபடி, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழா வரும் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெறவுள்ளது. கட்சித்தலைவர் ஒப்புதலுடன் மாநாட்டுபணிகளுக்கென ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் செயல்வடிவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, என் தலைமையில் செயல்படும் மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவில் பொருளாளர் பி.வெங்கடராமன், தலைமை நிலையச் செயலாளர் ஏ.ராஜசேகர் உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதேபோல் 27 குழுக்கள் அமைக்கப்பட்டு, அதற்கான தலைவர், ஒருங்கிணைப்பாளர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், பாதுகாப்பு மேற்பார்வைக் குழு ஒருங்கிணைப்பாளர்களாக எஸ்.குமார், ஜி.பாலமுருகன் உள்ளிட்டோரும், போக்குவரத்துக் குழு ஒருங்கிணைப்பாளராக கே.வி.எம்.தாமு, உபசரிப்புக் குழு தலைவராக க.அப்புனு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சித் தலைவர் ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட்ட குழுக்களுடன் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.