அநீதிகளுக்கு எதிராக அயராது போராடிய போராளி பேராசிரியர் ஜிஎன் சாய்பாபா: முதல்வர் ஸ்டாலின்!

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டு சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான டெல்லி பேராசிரியர் ஜிஎன் சாய்பாபா மறைவுக்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

டெல்லி பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர் ஜி.என்.சாய்பாபா. பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். மாவோயிஸ்டுகள் வேட்டை என்ற பெயரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட ஆபரேஷன் க்ரீன் ஹண்ட் எத்தனை ஆயிரம் பழங்குடி மக்களை காவு கொண்டது என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார். பழங்குடிகளின் பூர்வ நிலமான மலைகளை சுரங்கத் தொழிலுக்காக பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்கு எதிராக இடைவிடாது குரல் கொடுத்தவர் பேராசிரியர் ஜிஎன் சாய்பாபா. இத்தனைக்கும் 90% மாற்றுத் திறனாளி. சக்கர நாற்காலி இல்லாமல் இயங்க முடியாதவர்.

இத்தகைய போராளி பேராசிரியர் சாய்பாபாவுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளுக்கு எதிராகப் போராடி சட்டம் போராட்டம் நடத்தி சில மாதங்களுக்கு முன்னர்தான் விடுதலையாகி இருந்தார் பேராசிரியர் சாய்பாபா. மேலும் உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் பேராசிரியர் சாய்பாபா மரணம் அடைந்தார்.

பேராசிரியர் சாய்பாபா மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:-

பேராசிரியர் ஜி.என். சாய்பாபா அவர்களது மறைவு மனித உரிமைச் செயற்பாட்டுச் சமூகத்துக்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகும். தனது சுதந்திரமும் உடல்நிலையும் அச்சுறுத்தலில் இருந்தபோதும் கூட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அயராது போராடிய போராளி அவர். பல சவால்களை எதிர்கொண்ட நிலையிலும் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அவர் காட்டிய நெஞ்சுரம் வாய்மைக்கான நிலைத்த அடையாளமாக என்றும் நினைவுகூரப்படும். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், அவரது அன்புக்குரியோர்க்கும் இந்தக் கடினமான வேளையில் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.