பருவமழை ஆய்வுக் கூட்டம் கண்துடைப்பு நாடகமாக இன்றி முழுமையாக களத்தில் இறங்கி உயிரிழப்பு ஏதுமின்றி மக்களை பாதுகாக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தினார்.
திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட மதிப்பனூர், அலப்பலச்சேரி, மீனாட்சிபுரம், ஆலம்பட்டி, ராயபாளையம், சித்திரெட்டிபட்டி கிராமங்களில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் தலைமையில் தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்எல்ஏ மனோகரன் தொண்டர்கள், நிர்வாகிகளிடம் ஆய்வு மேற்கொண்டார். இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் பேசியதாவது:-
உலகத்திலுள்ள போதைப் பொருட்கள் தமிழகம் வழியாகவே இலங்கைக்கு செல்கிறது என, புலனாய்வு அமைப்பு இணை இயக்குநர் சொல்கிறார். நான் சொல்லவில்லலை. சட்ட சபையில் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டும்போது, நேரலை துண்டிக்கப்படுகிறது. வடகிழக்கு பருவ மழையையொட்டி துரித நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். உயிரிழப்பு இன்றி மழையை எதிர்கொள்ளவேண்டும். மீனவர்களுக்கு உரிய அறிவிப்பு கொடுத்து பாதுகாக்க வேண்டும்.
எவ்வளவு மழை வந்தாலும் சென்னையில் நாங்கள் எதிர்கொள்வோம் என முதல்வர் சொன்னார். ஒரு நாள் மழைக்கு சென்னை தத்தளிக்கிறது. மதுரையே மூழ்கிக் கிடக்கிறது. நீங்கள் நடத்திய பருவ மழை ஆய்வுக்கூட்டம் கண்துடைப்பு நாடகமாக இன்றி முழுமையாக களத்தில் இறங்கி மக்களை பாதுகாத்து உயிரிழப்பின்றி மழையை எதிர்கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியை போன்று முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க மக்கள் விரும்புகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.