நிவாரணப் பணிகளில் அரசு இயந்திரத்துக்குத் துணை நிற்குமாறு திமுக நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நாளிலேயே தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக, தமிழகத்தின் 22 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை மாநகரின் பல்வேறு சாலைகளிலும் நேற்று மழை நீர் தேங்கியது. வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து சென்றதால் பல்வேறு பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளிக்கரணை, கண்ணகி நகர், துரைப்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், ராம்நகர், பெருங்குடி, பெரும்பாக்கம், முடிச்சூர் வரதராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் தவிக்கின்றனர். ஒருநாள்மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் தலைநகர் சென்னை மிதக்க தொடங்கிஉள்ளது. சென்னையில் பட்டாளம், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு இன்று (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக பதிவாளர் அல்லி தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 7 மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிவாரணப் பணிகளில் அரசு இயந்திரத்துக்குத் துணை நிற்குமாறு திமுக நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘War Room’-ஐ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது, மழை பாதிப்புகளை தி.மு.க. நிர்வாகிகள் கண்காணிக்க வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு உதவிடுமாறும் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘War Room’-ஐப் பார்வையிட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட – பகுதி – வட்டச் செயலாளர்கள், கவுன்சிலர்கள் ஆகியோரைத் தொடர்புகொண்டு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முகாம்களுக்கு அழைத்துச் செல்வதோடு, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைச் செய்துகொடுத்து, நிவாரணப் பணிகளில் அரசு இயந்திரத்துக்குத் துணை நிற்குமாறு கேட்டுக் கொண்டேன்.
இரவு முழுதும் விழிப்புடன் பணியாற்றி, கோரிக்கைகளை ஒருங்கிணைத்து, பொதுமக்களுக்கு உதவிடுமாறு கழக நிர்வாகிகளை அறிவுறுத்தியுள்ளேன். அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள War Room எண்: 08069446900. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.