தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கால்களில் உள்ள 3 விரல்கள் அகற்றப்பட்டு உள்ள நிலையில், அவர் உடல் நலம்பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
தேமுதிக தலைமையகம் விஜயகாந்தின் உடல் நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது.
மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து கேப்டனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார். மேலும் கேப்டன் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
கால் விரல்கள் அகற்றப்பட்டு உள்ள செய்தியறிந்து விஜயகாந்த் உடல்நலம் பெற அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் விஜயகாந்த் உடல்நலம்பெற வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், “எனது அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன்” என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.