கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது: இந்தியா கண்டனம்!

பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறியதற்கான ஆதாரம் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறிய நிலையில், இது மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை (cavalier attitude) என்று இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இன்று நாங்கள் கேள்விபட்டவை எல்லாம் நாங்கள் தொடர்ந்து பேசி வந்ததை உறுதிப்படுத்துவதாகவே இருக்கிறது. இந்தியா மற்றும் இந்திய தூதர்களுக்கு எதிராக தான் வைத்த கடுமையான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் எந்த ஆதாரத்தையும் கனடா எங்களிடம் (இந்தியாவிடம்) அளிக்கவில்லை. இந்தியா – கனடா இடையேயான உறவுகளின் இந்த ஏற்றுக்கொள்ளமுடியாத (cavalier attitude) நடத்தை ஏற்படுத்திய சேதத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மட்டுமே பொறுப்பு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அரசினை விமர்சிப்பவர்களை கனாடவில் மவுனமாக்கும் செயல்களில் இந்திய அரசின் தொடர்பு இருக்கிறது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், இது தொடர்பான ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங், கனடா மண்ணில் கொல்லப்பட்டதில் இந்தியாவின் தொடர்பு குறித்து தனது அரசின் உளவுத்துறை மூலம் கிடைத்த ஊகங்களைத் தவிர ஆதராங்களை வழங்கவில்லை என்று ஒப்புக்கொண்டார்.

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து விசாரிக்குமாறு இந்தியாவை கனடா கேட்டுக்கொண்ட போது, அதற்கான ஆதாரங்களை இந்தியா கேட்டது. அந்த நேரத்தில் அது உளவுத்துறையின் முதன்மை ஊகம் மட்டுமே, அதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கூறியிருந்தார்.

நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக கனடா பிரதமரின் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து இந்தியா – கனடா இடையேயான தூதரக உறவில் விரசல்கள் ஏற்பட்டு கடந்த சில வாரங்களாக அது தீவிரமடைந்தது. இந்த விவகாரத்தை தவறாக கையாண்டதாக இரு நாடுகளும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டன. எந்த விதமான ஆதராத்தையும் அளிக்காமல் கனடா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக இந்தியா சமீபத்தில் கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.