“தமிழக அரசு ஏற்கெனவே மழைநீர் வடிகால் பணிகளை அனைத்து இடங்களிலும் மிக கச்சிதமாக செய்து முடித்து விட்டதால், கனமழை பாதிப்பிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக முதல்வரின் தொலைநோக்கு செயல்பாடுகள் உரிய பலனை வழங்கியிருக்கின்றன. எதிர்கட்சியினரே விமர்சிக்க முடியாத அளவுக்கு தமிழக அரசின் செயல்பாடுகளை அனைவரும் பாராட்டுகிறார்கள்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையின் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையங்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருந்தன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வடமாவட்டங்களில் கடுமையான கனமழை பெய்தது. இதையொட்டி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இந்நிலையில், மழையால் எந்தவிதமான பாதிப்பும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை போன்ற பல துறைகளின் அதிகாரிகள் தீவிரமாக களத்தில் இறங்கி அரும்பணியாற்றியிருக்கிறார்கள். அதன்மூலம் கடும் மழையினால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் மழை நின்ற சில மணித்துளிகளிலேயே இயல்பு நிலைக்கு திரும்பியதை தமிழக அரசின் சாதனையாக கருதலாம். இதற்காக தமிழக முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்களை மனதார பாராட்டுகிறேன்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா பகுதியில் இன்று (அக்.17) கரையை கடக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனால் அதிதீவிர கனமழையிலிருந்து சென்னை மாநகரம் தப்பியுள்ளது. தமிழக அரசின் சார்பில் முதல்வரின் சிறப்பு கவனத்தின் காரணமாக கடும் மழையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களில் 7.18 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்களை சென்னை மாநகராட்சி வழங்கியிருக்கிறது. அதற்காக பல்வேறு இடங்களில் சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் அமைச்சர்கள், மேயர் உள்ளிட்ட அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் விநியோகம் செய்யப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது.
தமிழக அரசு ஏற்கெனவே மழைநீர் வடிகால் பணிகளை அனைத்து இடங்களிலும் மிக கச்சிதமாக செய்து முடித்து விட்டதால், கனமழை பாதிப்பிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக முதல்வரின் தொலைநோக்கு செயல்பாடுகள் உரிய பலனை வழங்கியிருக்கின்றன. சென்னையில் 21 சுரங்கப் பாதைகளில் உடனடியாக மழைநீர் அகற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ள நீரை வெளியேற்றுவதில் மாநகராட்சி, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைகள் கைகோர்த்து அசுர வேகத்தில் செயல்பட்டிருக்கிறது. சென்னையில் கொட்டி தீர்த்த கனமழையை அகற்றுவதில் மின்னல் வேகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். 95 சதவிகித மழைநீரை அகற்றும் பணி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சென்னை முழுவதும் நடைபெற்று வரும் 100 மருத்துவ முகாம்களில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களில், கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் 12 லட்சம் பேர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் தேங்கிய தண்ணீரை அகற்றி சாதனை படைத்த தூய்மை பணியாளர்களை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிற்றுண்டி உள்ளிட்ட உதவி பொருட்களை நேரடியாக வழங்கி பாராட்டியது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னை மாநகர மக்கள் அனைவரும் நிம்மதியடைகிற வகையில் இன்று (அக்.17) இயல்பு நிலை திரும்பியிருக்கிறது. இதற்கு தமிழக அரசின் புயல் வேக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே முக்கிய காரணமாகும். எதையும் விமர்சனம் செய்து வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியே தமிழக அரசின் நிவாரண நடவடிக்கைகளை பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தமிழக அரசு கடந்த காலங்களில் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உரிய பலன் கிடைத்துள்ளது. எதிர்கட்சியினரே விமர்சிக்க முடியாத அளவுக்கு தமிழக அரசின் செயல்பாடுகளை அனைவரும் பாராட்டுகிறார்கள். இத்தகைய சீரிய முயற்சிகளை திட்டமிட்டு, செயல்படுத்திய தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து பெருமக்களையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.