மண் காப்போம் இயக்கத்துக்கு 320 கோடி பேர் ஆதரவு: ஜக்கி வாசுதேவ்

மண் காப்போம் இயக்கத்துக்கு இதுவரை 320 கோடி பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பேசினார்.

‘மண் காப்போம்’ இயக்கத்தின் மூலம் மண் வளத்தை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பல்வேறு நாடுகளிலும் பைக் மூலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பயணத்தை நிறைவு செய்து நேற்று கோவை வந்த அவருக்கு பல்வேறு இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை ‘கொடிசியா’ வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:-

‘மண் காப்போம்’ இயக்கத்துக்காக 74 நாடுகளில் சுற்றுப்பயணம் முடித்து திரும்பி உள்ளேன். இப்பயணம் துவங்கும் போது மண்ணுக்கு யார் ஆதரவு தரப் போகின்றனர் என கேள்வி எழுந்தது. இதுவரை 320 கோடி பேர் இந்த இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எட்டு மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

கடந்த 30 ஆண்டுகளாக மண் பற்றி பேசி வருகிறேன். பேசுவதுடன் நின்று விடாமல் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்பயணத்தை மேற்கொண்டேன். இங்கு நடப்பது 654வது நிகழ்ச்சி. இதுவரை பைக்கில் 28 ஆயிரத்து 156 கி.மீ. பயணம் செய்துள்ளேன். கடந்த மார்ச் 21 முதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். இனி தான் கடினமான வேலை துவங்க உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுக்க சென்று மண்ணை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மண்ணைக் காப்பாற்ற எடுத்த உறுதியை செயல்படுத்த வேண்டும். அனைவரும் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். இது கட்டாயம் நடக்கும்.

எவ்வளவு வேகத்தில் நடக்க வேண்டும் என்பது தான் நமக்கு தேவை. அடுத்த 10 ஆண்டுகளில் மண்ணில் ‘ஆர்கானிக்’ சத்தை 3 சதவீதம் அதிகரிக்கச் செய்ய வேண்டும். விவசாயம் செழிக்க 15 நிமிடம் மண்ணைப் பற்றி மொபைல்போன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அடுத்த தலைமுறைக்கு முக்கியமானது மண். இன்று உலக யோகா தினம். மனிதனுக்கும் மரத்துக்கும் யோகா நடக்கிறது. உணர்வுபூர்வமாக புரிந்து கொண்டால் மரம் மீது மிகப்பெரிய காதல் வரும். இயற்கையை சுவாசிக்க வேண்டும். மண்ணுக்காக ஒன்றாக வேண்டும். பல்வேறு நாடுகளில் அடுத்த கட்டமாக இவ்விழிப்புணர்வை கொண்டு செல்ல முயற்சி செய்து வருகிறேன். மண் முக்கியம் என மக்கள் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.