எனக்கு எது வசதியானதோ அந்த உடைகளை மட்டுமே அணிகிறேன்: நடிகை திரிப்தி திம்ரி!

எனக்கு எது வசதியானதோ அந்த உடைகளை மட்டுமே அணிகிறேன். அதில்தான் தன்னம்பிக்கை இருக்கும் என்று நடிகை திரிப்தி திம்ரி கூறியுள்ளார்.

அனிமல் படத்தில் ‘ஜோயா’ கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை திரிப்தி திம்ரி. 2017இல் போஸ்டர் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானாலும் ‘லைலா மஜ்னு’, ‘புல்புல்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இருப்பினும் அனிமல் படம் இந்தியா முழுவது புகழைப் பெற்றுத் தந்தது. இவரது அழகான தோற்றம் மட்டுமின்றி கச்சிதமான நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றன. ஏற்கனவே சமூக வலைதளங்களில் திரிப்தி திம்ரி இந்தியாவின் ‘புதிய நேஷ்னல் க்ரஷ்’ என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். படத்தில் வரும் ‘அண்ணி-2’ என்ற வார்த்தையும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தற்போது, ராஜ்குமார் ராவ் உடன் விக்கி வித்யா கா வோக் வாலா விடியோ படத்தில் நடித்துள்ளார். அக்.11 அன்று வெளியான இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் ஃபேஷன் குறித்து திரிப்தி திம்ரி கூறியதாவது:-

எந்த ஆடைகளை வேண்டுமானாலும் நான் அணிவதில்லை. எனது வழியில் இருந்து நான் மாறுவதில்லை. எனக்கு எது வசதியானதோ அந்த உடைகளை மட்டுமே அணிகிறேன். அதில்தான் தன்னம்பிக்கை இருக்கும். தன்னம்பிக்கை என்பது மிகவும் முக்கியமானது. எனது தனிப்பட்ட ஸ்டைல் என்பது சௌகரியமானது, அழகானது, கிளாசிக்கானது.

நான் ஃபேஷனில் ரிஸ்க் எடுப்பேன். ஆனால் அது என்னுடைய சௌகரியமான எல்லைக்குள் மட்டுமே இருக்கும். ஃபேஷன் என்பது மிகவும் தனிப்பட்ட விஷயம்; அது சுயத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழி. நீங்கள் அதில் பொய்யாக இருந்தால் மக்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். நீங்கள் அணிவதை விரும்பி அணிய வேண்டும்.

எனது சகோதரி கொடுத்த உடைதான் எனக்கு மிகவும் பிடித்த உடை. பள்ளியில் நான் மிகவும் அமைதியாக கவனத்தைக் கோராத சிறுமியாக இருந்தேன். கூட்டத்தின் நடுவில் அமர்ந்திருப்பேன். அதனால் ஆசிரியர்கள் என்னை கண்டுபிடிக்கமாட்டார்கள்.

நான் முதலில் நடிக்கிறேன் எனக் கூறும்போது எனது பெற்றோர்கள் மிகவும் ஆச்சரியமடைந்தார்கள். உறவினர்களிடம்கூட பேசாத நீ, 200 பேருக்கு மத்தியில் எப்படி நடிப்பாய் எனக் கேட்டார்கள். தன்னம்பிக்கை இருந்தால் எல்லாம் சாத்தியமே. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.