தைவான் விவகாரத்தை இந்தியா எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்தது. ஆனால், தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் தைவான் எல்லைக்கு போர்க் கப்பல்களை அனுப்பி சீனா பதற்றத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் வேறு எந்த நாடுகளும் தைவானுடன் அதிகாரப்பூர்வ உறவு வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சூழலில், அண்மையில் இந்தியாவின் மும்பை நகரில் தைவானின் பொருளாதார மற்றும் கலாசார மைய அலுவலகம் திறக்கப்பட்டது. ஏற்கனவே டெல்லி மற்றும் சென்னையில் தைவானின் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 3-வதாக மும்பையில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தைவான் விவகாரத்தை இந்தியா எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், “உலகில் ஒரே சீனாதான் இருக்கிறது. அந்த சீனாவின் ஒரு அங்கமாக தைவான் உள்ளது. சீனாவுடன் தூதரக உறவு வைத்துள்ள நாடுகள், தைவானுடன் அலுவலக உறவை ஏற்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
தைவான் விவகாரத்தை இந்தியா விவேகமாகவும், எச்சரிக்கையாகவும் கையாள வேண்டும். இந்தியா-சீனா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படாத வகையில், தைவானுடன் இந்தியா அலுவலக ரீதியாக தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என வலியுறுத்துகிறோம். இது குறித்து இந்திய தரப்புக்கு எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்திருக்கிறோம்” என்று கூறினார்.