ஈஷா யோகா மையத்தின் மீதான வழக்குகளை தமிழக அரசு விசாரிக்க தடையில்லை: உச்சநீதிமன்றம்!

கோவை ஈஷா யோகா மையத்தின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை தமிழக அரசு விசாரிப்பதற்கு எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு அக்டோபர் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கோவை ஈஷா மையத்தில் யோகா படிக்கச் சென்ற தங்களது இரு மகள்களை மீட்டுத் தருமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை வடவள்ளியை சேர்ந்தவர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த புகார்களை கோவை ஈஷா மையம் மறுத்து விளக்கமளித்துள்ளது. தங்கள் விளக்கத்தில், எங்கள் மீது மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. யாரையும் திருமணமோ துறவறமோ மேற்கொள்ளுமாறு வற்புறுத்தியதில்லை. தனிமனித சுதந்திரத்தில் தலையிட எவருக்கும் உரிமையில்லை என தெரிவிக்கப்பட்டது.

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முனைவர் காமராஜ். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடர்ந்திருந்தார். அதில் அவர், எனது மகள்கள் லதா, கீதா ஆகியோர் ஈஷா மையத்தில் யோகா கற்க சென்றனர். பிறகு அங்கேயே தங்கிவிட்டார்கள். அங்கு அவர்களை தனி அறையில் அடைத்து துன்பறுத்துவதாக தகவல் வருகிறது. இதனால் நானும் என் மனைவியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். நான் ஈஷாவிடம் பொது மன்னிப்பு கேட்டால்தான் என் மகள்களுடன் பேச முடியும் என கூறுகிறார்கள். எங்கள் மகள்களை மீட்டு தாருங்கள் என அந்த மனுவில் காமராஜ் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி , ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்துவிட்டு மற்ற பெண்களை சன்னியாசி ஆக்குவது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார். தொடர்ந்து நீதிபதிகள் நாங்கள் யாருக்கும் ஆதரவாகவும் எதிராகவும் இல்லை. எனினும் ஈஷா யோகா மையம் மீது சந்தேகங்கள் உள்ளன. எனவே ஈஷா யோகா மையம் மீது மொத்தம் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று ஆய்வு செய்து அக்டோபர் 4ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து போலீஸார், சமூக நல அதிகாரிகள் என ஈஷா யோகா மையத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் ஈஷா யோகா மையம் தொடர்பான அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததற்கு தடை விதிக்க வேண்டும் என ஈஷா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவானது கடந்த 3ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம், அங்குள்ள வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றிக் கொள்வதாக தெரிவித்திருந்தது. மேலும் காவல் துறையிடம் உயர்நீதிமன்றம் கேட்டிருந்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் கோவை மாவட்ட எஸ்பி நேற்று பதில் மனு தாக்கல் செய்தார். அதில் ஈஷா யோகா மையத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள். அங்கு என்ன நடக்கிறது போன்றை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அது போல் ஈஷா மையத்தில் தகன மேடையும் உள்ளது. ஈஷா யோகா மையத்திற்கு சென்று பலர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஈஷா விவகாரத்தில் பல வழக்குகள் உள்ளதால் இதனை விசாரிக்க தடை விதிக்கக் கூடாது என அரசு தரப்பு வாதிட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான விசாரணையை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை. இந்த வழக்கு தொடர்பான தமிழக காவல் துறையின் அறிக்கையை நாங்கள் இன்னும் படிக்கவில்லை என கூறிய நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.