உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்டு அகதிகளாக உள்ள குழந்தைகளுக்கு உதவ தான் வாங்கிய நோபல் பரிசை ரூ.808 கோடிக்கு ரஷ்ய பத்திரிகையாளர் விற்பனை செய்துள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த டிமிட்ரி முரடோவ் (60) பத்திரிகையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2021ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசுடன் வழங்கப்பட்ட ரூ.3.80 கோடியை மாஸ்கோவில் முதுகெலும்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் மருத்துவ செலவுக்காக வழங்கினார்.
தற்போது, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், சுமார் 60 லட்சம் பேர் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறி உள்ளனர். இதில் ஏராளமான குழந்தைகள் பெற்றோர்களை இழந்து உணவின்றி தவித்து வருகிறது. இவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ செலவுக்காக டிமிட்ரி முரடோவ் நிதி திரட்டி வருகிறார். இதன் ஒரு பகுதியாக தன்னுடைய நோபல் பரிசை ஏலம் விட முடிவு செய்தார். அதன்படி, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ஹெரிடேஜ் என்கிற நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டது. இது, ரூ.808 கோடிக்கு ஏலம் போனது. இத்தொகை முழுவதையும் உக்ரைனில் போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதாக டிமிட்ரி முரடோவ் அறிவித்துள்ளார்.