நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ் தாய் வாழ்த்து பாடலையே ரத்து செய்துவிடுவேன்: சீமான்

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ் தாய் வாழ்த்து பாடலையே ரத்து செய்துவிடுவேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

ஈரோட்டில் தமிழக பண்பாட்டு கண்காட்சி நடைபெற்றது. இதனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் திராவிட நல் திருநாடு என்று வார்த்தை நீக்கியதாக சொல்லுபவர்கள் ஆரியம் வழக்கொழிந்து உள்ளிட்ட வார்த்தைகளை தூக்கியது யாரு?. நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தாய் பாட்டு எடுக்கப்படும். அதற்கு என்ன செய்வார்கள். கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட நாகரிகம் தமிழகத்தின் நாகரிகம் என்று தான் சொல்கிறது. ஆனால் இங்கு ஆட்சியில் உள்ளவர்கள் திராவிட நாகரிகம் என்று சொல்கிறார்கள். ஆளுநரை மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இச்சூழலில் நாங்கள் கொந்தளித்தால் தான் மாற்றினார்கள் என்று சொல்வதற்கு தான் ஆளுநர் விவகாரத்தை பேசி வருகின்றனர்.

ஆளுநருக்கு எதிராக இவ்வளவு கோபப்படுகிறார்கள். கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழாவில் இதே ஆளுநரை கட்டிப்பிடித்து கொஞ்சிக் குலாவியது யார். திராவிடம் என்ற சொல் எங்கிருந்து வந்தது. மனுஸ்ருமிதியில் இருந்து திராவிடம் என்ற சொல்லை எடுத்தேன் என கால்டுவெல் கூறுகிறார். திராவிடம் எதைக் குறிக்கிறது? நான் எப்படி திராவிடனானேன்.. இங்கு எங்கு திராவிட நல் திருநாடு இருக்கிறது.

தமிழ் படிக்க எழுதத் தெரியாத முன்று தலைமுறையினரை உருவாக்கியதைத் தவிர திராவிடக் கட்சிகளின் சாதனைகள் என்ன என்று சொல்லுங்கள். தெருவுக்கு இரண்டு படிப்பகங்கள் இருக்க வேண்டிய இடத்தில், தெருவுக்கு இரண்டு குடிப்பகங்களை கொண்டு வந்ததை தவிர வேறு என்ன சாதனை செய்துவிட்டனர்.

தீபாவளிக்கு தற்காலிகமாக 1,500 மதுக் கடைகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதனை கவனத்தில் கொள்ளாத வகையில் திராவிடம் விடப்பட்டது என்ற பிரச்சினை பெரிதாகப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக 2,500 கோடி ரூபாய் தான் மழைநீர் வடிகால் கட்டமைப்பு உருவாக்க தேவைப்படும். எனினும், ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்கள்.

யானை என்ன ஒரு கட்சிக்கு மட்டும் தான் என்ன சொந்தமா. இதையெல்லாம் விஜய் கண்டுக்கொள்ள மாட்டார். தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள தான் புகழ்பெற்ற விஜயை இடையூறு செய்து வருகிறார்கள். நடிகர் விஜய் என்னை எதிர்த்து வேலை செய்தாலும் அவரை ஆதரிப்பேன். ஏன் என்றால் அவர் என்னுடைய தம்பி. சேலத்தில் திமுக மாநாடு நடத்தும் போது கட்டுப்பாடு விதிக்கவில்லை. ஆனால் விஜய் நடத்தினால் இவ்வளவு இடையூறு செய்வது ஏன். பரந்தூர் விமான நிலையம் ஒருபோதும் கட்ட முடியாது என்னை தூக்கி தான் சிறையில் போட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.