வயநாடு இடைத்தேர்தலில் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டி!

எதிர்வரும் நவம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ள வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகிறார். இந்த அறிவிப்பை பாஜக தலைமை அறிவித்துள்ளது.

39 வயதான அவர், பாஜக மகிளா மோர்ச்சா மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இடைத்தேர்தலில் இதே தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) கூட்டணி சார்பில் சத்யன் போட்டியிடுகிறார்.

கடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். இரண்டு தொகுதியில் வெற்றி பெற்ற அவர், ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக் கொண்டு, வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காலியான வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோழிக்கோடு நகராட்சியில் இரண்டு முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொறியியல் பட்டதாரியான அவர், கடந்த 2021 கேரள மாநில சட்டப்பேரவை தேர்தலில் கோழிக்கோடு தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியின் அகமது தேவர்கோவிலிடம் தோல்வியை தழுவினார்.

“வயநாடு தொகுதி மக்கள் தங்களது பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேசும் மக்களவை உறுப்பினர்களை எதிர்பார்க்கின்றனர். மக்கள் பிரதிநிதியாக பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக அரசியலில் செயல்பட்டு வருகிறேன். மக்களோடு இருந்து வரும் எனக்கு அவர்களது தேவை என்ன என்பதும் தெரியும்” என தனியார் ஊடக நிறுவனத்துக்கு நவ்யா ஹரிதாஸ் தெரிவித்துள்ளார்.