மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுவதுபோல, இந்து மத பண்டிகைகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொல்ல வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் நடந்த டிடி தமிழ் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட நிலையில், அதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடு என்ற வார்த்தை புறக்கணிக்கப்பட்டது. இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். ஆனால், தன் மீது பொய்யான குற்றச்சாட்டை இனவாதத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாக ஆளுநர் பதில் அளித்தார். இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை ஆளுநருக்கு முதல்வர் எழுப்பியுள்ளார். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை தொடர்பாக ஆளுநருக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன.
இந்த நிலையில் பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற சென்னை தொலைக்காட்சி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் ஒரு வரி விடுப்பட்டதை வைத்து, திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தங்களின் பிரிவினை அரசியலை செய்து வருகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.
சென்னை தொலைக்காட்சி பொன் விழாவில் ஆளுநர் ஒரு விருந்தினராக மட்டுமே பங்கேற்றார் என்ற வானதி சீனிவாசன், “அங்கு நடந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கும் ஆளுநருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய குழுவினரின் கவனக்குறைவுக்கு ஆளுநர் எப்படி பொறுப்பாக முடியும்? கவனக்குறைவால் நேர்ந்த தவறுக்கு சென்னை தொலைக்காட்சி மன்னிப்பு கேட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
ஆனால், இதற்கு ‘ஆளுநரா? ஆரியரா?’ என கேள்வி எழுப்பி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மீது இனவெறி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கூறிய அவர், தமிழில் பெயர் வைக்காமல் ரஷ்ய சர்வாதிகாரியின் பெயரை வைத்துள்ள முதலமைச்சர், தமிழ் எங்கள் உயிர் மூச்சு எனக்கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்று விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ் இனமா, திராவிட இனமா என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் அவர், சிறுபான்மையினரின் வாக்குகள் மொத்தமாக கிடைக்கிறது என்பதற்காக, தீபாவளி, தைப்பூசம் போன்ற இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட சொல்லாமல், இந்து மதத்தின் மீது வெறுப்பை உமிழும் முதலமைச்சர் ஸ்டாலின், வகுப்புவாதம், பிளவுவாதம் பற்றி பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது என்றும் கூறினார்.
மேலும், “இனியாவது மொழி அரசியல், வெறுப்பு அரசியலை கைவிட்டு மக்கள் நலனுக்காக மட்டும் ஆட்சியை நடத்த வேண்டும். மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுவதுபோல, இந்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும். அனைத்து மதத்தினரையும் சமமாக மதியுங்கள். திராவிடம், திராவிட மாடல் என்று சொல்லி சொல்லி தமிழ், தமிழர்களின் அடையாளத்தை அழிக்காதீர்கள்” என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.