விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஓர் நாள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தே தீரும் என வன்னியரசு தெரிவித்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் தமிழகத்தின் முதல்வர் ஆக வேண்டும் என்பதே தங்களின் கனவு என அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி தந்தார். திமுக கூட்டணியில் விசிக உள்ள நிலையில் வன்னியரசு பேச்சு விவாதத்தை உண்டாக்கியது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசும்போது, விசிக தலைவர் திருமாவளவன் முதல்வர் ஆவதற்கான கனவு நடக்காது என்றும், சமூக நீதி குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு அருகதை கிடையாது எனவும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில் எல்.முருகனுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ள வன்னியரசு, “எல்.முருகனின் இந்த நிலைப்பாடு பாஜகவின் நிலைப்பாடா அல்லது அவரது நிலைப்பாடா? அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுச் சட்டம் கொண்டு வந்தபோது அதை சட்டமன்றத்திலும் வெளியிலும் ஆதரித்த இயக்கம் விசிக. அதனால் தான் இன்று வரை அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு தமிழகத்தில் நடைமுறையில் இருக்கிறது. அதில் எந்த பாதிப்பும் இல்லை. விசிகவின் நிலைப்பாடு உள் ஒதுக்கீட்டுக்கு எதிரானதல்ல, கிரிமிலேயருக்கு எதிரானது” என்று தெரிவித்தார்.
ஓபிசி சமூகத்துக்கு கிரிமிலேயர் மூலம் சமூகநீதிக் கோட்பாட்டை சிதைக்கும் பாஜகவின் சதியை அம்பலப்படுத்தி எதிர்த்து வரும் இயக்கம் விசிக என்றும், தலித்துகளுக்குள் கிரிமிலேயரை புகுத்தி சமூக நீதியை அழித்தொழிக்க முயற்சிக்கும் பாஜகவை தொடர்ந்து அம்பலப்படுத்துவதால் எல்.முருகன் காழ்ப்புணர்ச்சியில் சமூகநீதி என உளறுகிறார் என்று வன்னியரசு விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து, “இடஒதுக்கீட்டில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது நாட்டுக்கே தெரிந்ததுதான். ஆகவே, விசிகவுக்கு பாஜகவிலிருந்து யாரும் பாடம் எடுக்க முடியாது. அருந்தியருக்கான உள் ஒதுக்கீட்டை விசிக ஆதரித்தாலும் எல்.முருகன் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். புதிய தமிழகம், இந்திய குடியரசு கட்சி உள்ளட்ட பல கட்சிகள் உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பது முருகனுக்கு தெரியும். ஆனால், அக்கட்சிகளை கண்டிக்காமல் விசிகவையே குறிவைப்பது ஏன்? ஏனெனில் விசிகவில் தான் அருந்ததியர் சமூகத்தை சார்ந்தோர் அதிகம் இருக்கிறார்கள். பதவியிலும் இருக்கிறார்கள். இந்த கோபத்தில் தான் விசிக மீது வெறுப்பை கொட்டுகிறார் எல்.முருகன். விசிக ஓர் நாள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தே தீரும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க பாஜகவை அகற்றுவது தான் எமது இலக்கு. அதை நோக்கியே பயணம் செய்வோம்” என்று வன்னியரசு தெரிவித்துள்ளார்.