திருமாவளவன் முதல்வர் ஆக வேண்டும் என்பதை தான் வரவேற்பதாக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் பட்டியலின மக்களின் தலைவர் என்பதைத் தாண்டி ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவன், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் இரண்டாவது முறையாக தொடர்ச்சியாக எம்.பியாக இருந்து வருகிறார். இதனிடையே ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என திருமாவளவன் பேசிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதே தங்களின் கனவு என அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டி தற்போது விவாதங்களை உண்டாக்கியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் அளித்த பேட்டியில், “விசிக தலைவர் திருமாவளவன் முதல்வர் ஆவதற்கான கனவு நடக்காது. சமூக நீதி குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக வழக்கு தொடர்ந்த திருமாவளவன் எப்படி பட்டியலின மக்களின் தலைவராவார்” என்று கேள்விகளை முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “திருமாவளவன் முதல்வர் ஆக வேண்டும் என்பதை நான் வரவேற்கிறேன். அவருக்கு அதற்கான தகுதி உள்ளது. அப்படி நடந்தால் ஒரு தமிழனாக தம்பியாக என்னை விட பெருமைப்படுபவன் யாரும் இருக்க முடியாது. எல்.முருகன் இரண்டு முறை மத்திய அமைச்சர் ஆகும் போது திருமாவளவன் முதல்வராகக் கூடாதா?. அதனை சொல்வதற்கு எல்.முருகன் யார்? உள் ஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் அவரை முதல்வராக விடமாட்டீர்கள்? இட ஒதுக்கீட்டை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், உள் ஒதுக்கீட்டை எதிர்க்கிறோம். உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பதற்காக திருமாவளவனை முதல்வர் ஆக விடமாட்டோம் என்று சொன்னால், நாங்கள் எப்பாடுபட்டாவது அவரை முதல்வர் ஆக்குவோம்” என்றும் குறிப்பிட்டார்.
அப்போது, கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த சீமான் கூறியதாவது:-
இந்த விவகாரத்தில், எதுவும் பண்ண முடியாது. ஏனென்றால் பிரதமர் மோடி அவருடைய நண்பர். அவர் வந்து மணி அடித்துவிட்டு மாலை அணிவித்துவிட்டு செல்வார். இதில் நாம பேசி என்ன பலன் இருக்கிறது. எதுவும் மாறிவிடப் போகிறதா?. இந்த கட்சி ஆட்சிகளுக்கு தெரியாமல் அவர் அந்த இடத்தில் ஈஷா யோகா மையத்தை அமைத்துவிட்டார் என்று நினைக்கிறீர்களா? இந்த நாட்டில் உள்ள நச்சு திட்டங்கள், மீத்தேன், ஈத்தேன், அணு உலை, ஸ்டெர்லைட் எல்லாம் இந்த பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தெரியாமல் வந்துவிட்டதா?.. விடுதலைக்கு பிறகு பெரும்பாலும் ஆட்சி செய்தது காங்கிரஸ், கொஞ்சம் கொஞ்சம் மற்ற கட்சிகள் இருந்திருக்கலாம். இப்போது பாஜக தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது. ஒரு 20 ஆண்டுகளாக பாஜக தான் ஆட்சி செய்து வருகிறது.
இந்த 2 கட்சிகள் திணித்ததாக இருக்கலாம். ஆனால் இதனை ஏற்று தன் நிலத்தில் அனுமதித்தது யார்?.. ஏதோ ஒன்னு நடந்துருச்சு. அது மாதிரி தான் இது. ஈஷா யோகா மையத்தின் மீது நடவடிக்கை எடுக்குமா இந்த அரசு. யானை வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ளார்கள் என்று சொன்னார்கள். ஆனால் அரசே இதை மறுத்து சொல்கிறது. இல்லை இல்லை ஆக்கிரமிக்கவில்லை என்று. நாம் வேண்டுமால் இப்படி பேசிக்கொள்ளலாம். அவர் கூப்பிட்டால் மினிஸ்டர் வருகிறார். பிரதமர் வருகிறார். உங்களால் இப்போது மோடியுடன் செல்போனில் பேச முடியுமா? ஆனால் அவரால் எப்போது வேண்டுமானாலும் பேச முடியும். அம்பேத்கர் சொன்னதை தான் நீங்கள் இன்று நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதிகாரம் மிக வலிமையானது. இவ்வாறு சீமான் பேசினார்.