கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் 3 பேர் கைது!

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக மேலும் மூன்று பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைதானவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த 2022 ஆம் ஆண்டு ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி கார் வெடித்தது. இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஜமீஷா முபின் என்ற நபர் நிகழ்விடத்திலேயே பலியானார். முபீன் வீட்டில் நடந்த சோதனையில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் கிடைத்தது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்தது. பல்வேறு கோணங்களில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தினர். 14 பேரை கைது செய்த தேசிய புலனாய்வு முகமை, இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் நபர்களின் வீடுகளில் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு அங்கிருந்த ஆவணங்களையும் கைப்பற்றி, தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கடந்த நவம்பர் மாதம் கோவை மாவட்டம் போத்தனூர் திருமலை நகர் பகுதியை சேர்ந்த இப்ராஹீம் என்பவாது மகனான தாஹா நசீரை கைது செய்தனர். சௌரிபாளையம் பகுதியில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் பணியாற்றி வரும் நசீரும் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீனும் நண்பர்கள் என கூறப்படும் சூழலில் தாஹா நசீர் கைது செய்யப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக மேலும் மூன்று பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. அபூ ஹனிபா, சரண் மாரியப்பன் மற்றும் பவாஸ் ரகுமான் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. இதன் மூலம் கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி செய்யும் வேலையில் மூன்று பேரும் ஈடுபட்டு வந்தது தேசிய புலனாய்வு முகமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.