தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் சீமானை எப்படி தமிழர் என்று கூற முடியும்?: ஆர்.எஸ்.பாரதி!

மனோன்மணீயம் சுந்தரனார் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் சீமானை தமிழர் என்று எப்படி கூற முடியும்? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்தி மாதம் நிறைவுக் கொண்டாட்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்கள் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரிகளை விட்டுவிட்டு பாடிய சம்பவம் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நான் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து தூக்கப்படும். தமிழ்த்தாய் வாழ்த்தில் 2 வரியைத் தூக்கியதற்காக கொந்தளிப்பதா? ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தபோது வராத கோபம் 2 வரியைத் தூக்கியதற்கு வருகிறதா? கீழடியில் கண்டெடுக்கப்பட்டது தமிழர் நாகரிகம்தான், திராவிட நாகரிகமோ அல்லது இந்திய நாகரிகமோ அல்ல” என்று தெரிவித்தார். மேலும், “வரலாற்றில் ஆரியம் கண்டாய் தமிழன் கண்டாய் என்று உள்ளது. திராவிடத்தை வேண்டுமென்றே நுழைத்து விட்டு மூன்று சதவீதம் உள்ள பிராமணர்களைக் காட்டி 30 சதவீத திராவிடர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட நாகரிகம் தமிழர் நாகரிகம் என்று தான் சொல்லப்படுகிறது. ஆனால், ஆட்சியில் உள்ளவர்கள் திராவிட நாகரிகம் என்று சொல்கிறார்கள்.” எனக் கூறினார் சீமான்.

இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த சீமான் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார். தமிழ்த்தாய் வாழ்த்து, திமுக ஒன்றிய செயலாளரோ, மாவட்டச் செயலாளரோ, கலைஞரோ எழுதியது அல்ல. மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய கவிதை. அந்த தமிழ்த்தாய் வாழ்த்து 50 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிக்கூடங்கள் உள்பட எல்லா இடங்களிலும் பாடப்படுகிறது. மனோன்மணீயம் சுந்தரனார் பாடிய பாட்டையே சீமான் அவமதிக்கிறார் என்றால், அவரை எப்படி தமிழராக ஏற்றுக்கொள்ள முடியும்?

எங்களுக்கு தற்போது உள்ளவர் ஆளுநர் கிடையாது. ஆளுநரின் பதவி காலம் முடிந்துவிட்டது. அவருடைய மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு கிளம்ப வேண்டியதுதான். எப்போது கிளம்புகிறார் என தேதி மட்டும் தான் அறிவிக்க வேண்டும். அரசியல் சட்டத்தில் இன்னொரு ஆளுநர் பதவி ஏற்கும் வரை அவர் ஆளுநராக இருக்க வேண்டும் என்று இருக்கிறது. கேசுவல் லேபர் போல் ஆளுநர் தற்போது செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.