படத்தின் கதையை பிடிக்கவில்லை என்றால் உடனே கூறி விடுவேன்: கவின்!

நான் நடிக்கும் படத்தின் கதையை கேட்டால் பிடிக்கவில்லை என்றால் உடனே கூறி விடுவேன் என்று நடிகர் கவின் கூறியுள்ளார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர்களில் கவின் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். விஜய் டிவியில் சீரியல்களில் நடித்து வந்த கவின் முதன் முறையாக ரம்யா நம்பீசன் உடன் இணைந்து 2019 ஆம் ஆண்டு நட்புனா என்னான்னு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டார். அதில் சக போட்டியாளர் லாஸ்லியாவுடன் காதல் வசப்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டார். இதனை லாஸ்லியாவும் ஒரு பேட்டியில் உறுதிபடுத்தியுள்ளார். பின்னர் கடந்த ஆண்டு மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பிக்பாஸில் இருந்து வெளி வந்த பின் இவர் நடித்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. லிப்ட், டாடா, ஸ்டார் ஆகிய மூன்று படங்களும் இவருக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளன. தற்போது இயக்குனர் நெல்சன் தீலிப் குமாரின் முதல் தயாரிப்பு படமான பிளடி பெக்கர் படத்தில் நடித்துள்ளார். நெலசனின் உதவி இயக்குனர் ஆன சிவபாலன் முத்துக்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

பிளடி பெக்கர் படத்திற்கான புரோமோசனக்காக யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ஸ்டார் படத்திற்கான கதையை கேட்கும் போது மிகச்சிறப்பாக இருந்தது. அதனை காட்சிபடுத்தும் போதும் நன்றாகவே இருந்தது. ஆனால் படம் நிறைவடைந்து இறுதியாக பார்க்கும் போது படத்தில் பல தேவையில்லாத காட்சிகள் இருப்பதாக தோன்றியது. இது குறித்து படக் குழுவினரிடம் கூறினேன். ஆனால் இந்தக் குறைகளை யாரும் ஏற்கவில்லை. பார்வையாளர்களுக்கும் இதே போல தோன்றியது எனக் கூறியுள்ளார்.

ஸ்டார் படம் வெளியாகி கலவையான விமரசங்களையே பெற்றது. அதில் கவினின் நடிப்பு பெருமளவு பாராட்டப்பட்டாலும் திரைக்கதை மிகவும் மெதுவாக நகர்வதாக கூறியிருந்தனர். இந்த நிலையில் கவினே இப்படி கூறியது படத்தின் தொய்வுக்கான காரணத்தை விளக்குகிறது. மேலும் இந்த பேட்டியில் பேசிய கவின் நான் நடிக்கும் படத்தின் கதையை கேட்டால் பிடிக்கவில்லை என்றால் உடனே கூறி விடுவேன். ஏனென்றால் நான் ஆடிசன் செல்லும் போது சிலர் நான் செலக்ட் ஆனேனா இல்லையா எனக் கூட யாரும் சொல்ல மாட்டார்கள். ஆனால் நான் சொல்லி விடுகிறேன் எனக் கூறினார்.