போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்: டி.டி.வி.தினகரன்

போதைப்பொருள் கடத்தல், விற்பனையில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-

சென்னை கொடுங்கையூர் அருகே வீட்டிலேயே ஆய்வகம் அமைத்து மெத்தபெட்டமைன் எனும் கொடியவகை போதைப் பொருளை தயாரித்து விற்பனை செய்ததாக கல்லூரி மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

நாள்தோறும் ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியாகும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான செய்திகளையும், அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளையும் தி.மு.க அரசு கண்டு கொள்ளாததன் விளைவே, கல்லூரி மாணவர்கள் தங்களின் வீட்டிலேயே போதைப்பொருளை தயாரிக்கும் அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் போதை ஊசி, போதை மாத்திரைகள், போதை மிட்டாய்கள் உள்ளிட்ட போதை வஸ்துகள் குறித்து பலமுறை புகார் அளித்தும் அதனை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் தமிழகத்தில் பெருகிவரும் போதைப் பொருள் கலாச்சாரத்தை அடியோடு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதோடு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் தொடர்புடையவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.