இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ‘பிராண்ட் அம்பாசிடராக’ நியமிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கான போஸ்டர்களில் தனது புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ள தோனி அனுமதி அளித்துள்ளார் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி கே.ரவி குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி கே.ரவி குமார், “மகேந்திர சிங் தோனி தனது புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மற்ற விபரங்கள் குறித்து அவரிடம் தொடர்பு கொண்டுள்ளோம். வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் பணியை தோனி செய்வார். SWEEP (வாக்களர்களுக்கான முறையான கல்வி மற்றும் வாக்குப்பதிவில் பங்கேற்பு)-ன் கீழ் தோனி வாக்காளர்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பணியினை செய்வார். அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை வாக்காளர்களிடம் தூண்ட தோனியின் வேண்டுகோள் மற்றும் பிரபல்யம் பயன்படும் என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது” என்று தெரிவித்தார்.
ஜார்க்கண்ட்டில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 13, 20 என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்படுகின்றன.