தப்பு செய்யாதவங்களே இந்த உலகத்தில் இல்லை: பிரியங்கா மோகன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான படம் டாக்டர். பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான முதல் படம் அது. அவரது நடிப்பில் அடுத்ததாக பிரதர் படம் வெளியாகவுள்ளது. படத்துக்கு ஓரளவு நல்ல விமர்சனமே கிடைத்த சூழலில் பிரியங்கா மோகன் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

கன்னட படமான ஒந்த் கத்தே ஹெல்லா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். அடிப்படையில் பொறியாளரான இவர் அவ்வப்போது மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்ததால் திரைத்துறை கதவு திறந்தது. முதல் படத்தை விக்ரம் குமார் இயக்கினார். படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இருந்தாலும் பிரியங்கா மோகனின் நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது. சூழல் இப்படி இருக்க சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரியங்கா மோகன். படம் மெகா ஹிட்டானது மட்டுமின்றி பிரியங்கா மோகனின் நடிப்பும் பலமான வரவேற்பையே பெற்றது. இதனால் தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன.

டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்தார். கடைசியாக அவர் சரிபோதா சனிவாரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் தனது திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருந்தார். இப்படி பிஸியாக இருக்கும் பிரியங்கா மோகன் விரைவில் டாப் நடிகைகள் லிஸ்ட்டில் இணைந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு அவர் கைவசம் படங்கள் இருக்கின்றன. அடுத்ததாக பிரதர் படம் தீபாவளி அன்று வெளியாகவிருக்கிறது.

இதற்கிடையே பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்தபோது அவரிடம் செல்ஃபி கேட்டு ரசிகர்கள், ரசிகைகள் மொய்த்தனர். ஆனால் அவர்களிடம் சிடுசிடுவென்று பேசினார் பிரியங்கா அந்த வீடியோ ட்ரெண்டானது. அதனையடுத்து ஒரு ரசிகரிடமும், இப்படி எல்லாம் ஃபாலோ செய்து வரக்கூடாது என்றும் கூறினார். பிரியங்கா மோகன் அப்படி பேசியதற்கு ஒருதரப்பினர் தங்களது ஆதரவையும், இன்னொரு தரப்பினர் விமர்சனத்தையும் முன்வைத்தனர்.

இந்நிலையில் பிரியங்கா மோகன் அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. “பெண்களுக்கு ஒருவர் மீது நல்ல எண்ணம் வர வேண்டுமெனில் அவர்களை ஒருவர் பாதுகாப்பாக உணர செய்ய வேண்டும். இந்த உலகத்தில் தவறு செய்யாத மனிதர்களே யாரும் இல்லை. தவறு செய்வது இயல்புதான். எனவே அதனை நினைத்து கஷ்டப்படக்கூடாது” என்றார்.