ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக, 1,000 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானின் நாட்டின், பக்டிகா என்ற மாகாணத்தில், இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில், 6.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தை உணர்ந்த பொது மக்கள், அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். வணிக வளாகங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவை குலுங்கின. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி, சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகிய நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 1,000 ஆக அதிகரித்துள்ளது.
இதில் பக்டிகா மாகாணத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும், 600 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தத் தகவலை தாலிபான் அமைப்பினர் உறுதிப்படுத்த உள்ளனனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டிலும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு வெளிநாட்டு உதவி நிறுவனங்கள் அனைத்தும் வெளியேறிவிட்டதால் உள்ளூர் மீட்பு குழுக்கள் மட்டுமே மீட்பு பணியில் ஈடுபட்டன. இதனால் மீட்பு பணிகள் சிக்கலானதாகவும், கடினமானதாகவும் அமைந்தது. இடிபாடுகளை தோண்டதோண்ட கொத்து, கொத்தாக பிணங்கள் மீட்கபட்டன. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை சுமார் 1,000 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1,500-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேவேளையில் இன்னும் ஏராளமானோர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மீட்பு பணிகள் விரைவு இது குறித்து தலீபான் அரசின் துணை செய்தி தொடர்பாளர் பிலால் கரிமி கூறுகையில், “பக்டிகா மாகாணத்தின் 4 மாவட்டங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான நம் நாட்டு மக்கள் கொல்லப்பட்டனர்; படுகாயம் அடைந்தனர்; டஜன் கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. மேலும் பேரழிவைத் தடுக்க உடனடியாக குழுக்களை அனுப்புமாறு அனைத்து உதவி நிறுவனங்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என கூறினார். நிலநடுக்கம் தாக்கிய பகுதிகளில் விரைவாக மீட்பு பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாா் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக பிரதமா் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவா்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக மோசமான காலகட்டங்களில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா துணையாக இருக்கிறது. அந்நாட்டுக்குத் தேவையான அனைத்து நிவாரணப் பொருள்களையும் விரைந்து வழங்க இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளாா்.