பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரவீனா ரவி தனது காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார்.
மறைந்த நடிகர் முரளி நடிப்பில் வெளியான ஊட்டி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சிறு வயதிலேயே சினிமாவுக்கு வந்தவர் தான் ரவீனா ரவி. 2012ம் ஆண்டு வெளியான சாட்டை படத்தில் டப்பிங் செய்து டப்பிங் கலைஞராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ரவீனா ரவி பல சூப்பர் ஹிட் படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். அமைரா தஸ்தூர், காஜல் அகர்வால், எமி ஜாக்சன், மடோனா செபாஸ்டியன், மாளவிகா மோகனன், ராஷி கன்னா மற்றும் தீபிகா படுகோன் என பல முன்னணி நடிகைகளுக்கு இவர் டப்பிங் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘வாலாட்டி’ எனும் செல்லப்பிராணியான நாய் படத்தை இயக்கிய இயக்குநர் தேவன் ஜெயக்குமார் என்பவரைத்தான் டப்பிங் கலைஞரான ரவீனா ரவி காதலித்து வருகிறார். தீபாவளி ஸ்பெஷலாக இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார் ரவீனா ரவி. ஏற்கனவே காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் அந்த படத்தின் நாயகன் உடன் மாலையும் கழுத்துமாக இவர் இருந்ததை பார்த்து இவருக்கு திருமணம் ஆகிவிட்டதா என ரசிகர்கள் பதறினார்கள். ஆனால், அது படம் என தெரிந்ததும் நிம்மதியடைந்த இளைஞர்கள் தற்போது இந்த அறிவிப்பை பார்த்து எனக்கு வருத்தம்ப்பா என கமெண்ட் போட்டு வருகின்றனர்.
தனது காதலரை மாமன்னன் படத்தில் ரத்னவேலுவுக்கு மனைவியாக நடித்த ரவீனா ரவி அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், கூடிய சீக்கிரமே இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டையும் தாண்டி ஒரு கிடாயின் கருணை மனு படத்தில் நடிக்க ஆரம்பித்த ரவீனா ரவி ராக்கி, வீரமே வாகை சூடும், லவ் டுடே, மாமன்னன் மற்றும் வட்டார வழக்கு என பல படங்களில் நடித்துள்ளார்.