மகனை இழந்ததுதான் என் வாழ்க்கையிலேயே எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பெருந்துன்பம் என்று பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜ், பல மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதேநேரத்தில், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும் அவ்வப்போது குரல் கொடுத்துவருகிறார். அண்மையில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், திருப்பதி லட்டை வைத்து போலி ஆன்மிகம் பேசி அரசியல் செய்வதாக பிரகாஷ் ராஜ் விமர்சித்திருந்தது பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது.
இந்த நிலையில், தனது 5 வயது மகனின் இழப்பு குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
எனது தோழி கௌரி லங்கேஷ் மற்றும் என் மகன் சித்தார்த்தின் மரணம்தான் எனது வலி. என்றாலும், என்னால் சுயநலமாக இருக்க முடியாது. எனக்கு மகள்கள் உள்ளனர், எனக்கு ஒரு குடும்பம் உள்ளது. எனக்கு ஒரு தொழில் உள்ளது. எனக்கு மனிதர்கள் இருக்கிறார்கள், எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது, அதற்கும் நான் பொறுப்பு. ஆகையால், எனது வலியைவிட எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறேன், ஏனெனில், அது தனிப்பட்ட வலியைக் குறைக்கிறது. தவிர, அதை நான் மறைக்க விரும்பவில்லை.
சில காயங்கள், சதையைவிட ஆழமானவை. நீங்கள் அதனுடன் வாழவேண்டும். நான் ஒரு மனிதன். அது என்னைத் தொந்தரவு செய்கிறது, என்னை காயப்படுத்துகிறது, அது மிகவும் உதவியற்றதாக உணர்கிறது. மரணம் எப்போதும் இருக்கிறது. ஆனால், வாழ்வதற்கான காரணங்களைக் கண்டுபிடிப்போம். சில இழப்புகள் ஒருபோதும் வலியை நிறுத்தாது என்றாலும், வாழ்க்கையின் நேர்மறையான அம்சங்களில் கவனம் செலுத்துவது அவசியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் 1994ம் ஆண்டு கன்னட நடிகை லலிதா குமாரியை திருமணம் செய்தார். அவர்களுக்கு மேகனா மற்றும் பூஜா என்ற இரண்டு மகள்கள் மற்றும் சித்தார்த் என்ற ஒரு மகனும் இருந்தனர். மகன் சித்தார் கடந்த 2004ம் ஆண்டு மரணமடைந்தார். 2004ல் பிரகாஷ் ராஜ் மற்றும் லலிதா குமாரி இருவரும் பிரிந்தனர். இந்த விவாகரத்துக்குப் பிறகு, அவர் 2010ல் நடன இயக்குநர் போனி வர்மாவை திருமணம் செய்துகொண்டார்.