வங்கிகளில் ரூ.34,615 கோடி கடன் மோசடி செய்ததாக திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் (டிஹெச்எஃப்எல்) நிதி நிறுவனம், அதன் முன்னாள் தலைமை நிா்வாக இயக்குநா் கபில் வதாவன், தற்போதைய இயக்குநா் தீரஜ் வதாவன் உள்ளிட்டோா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
திவான் வீட்டு வசதி நிதி கழக (டி.எச்.எப்.எல்.) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தவர் கபில் வதாவன். இயக்குனராக இருந்தவர் தீரஜ் வதாவன். இவர்கள் யூனியன் பேங்க் இந்தியா தலைமையிலான 17 வங்கிகள் கூட்டமைப்பை ரூ.34 ஆயிரத்து 615 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக அந்த வங்கிகள் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் சி.பி.ஐ.யிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. புகாருக்கு முகாந்திரம் இருப்பது தெரிய வந்ததால், டி.எச்.எப்.எல். நிறுவனம், கபில் வதாவன், தீரஜ் வதாவன், 6 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. சி.பி.ஐ.யால் விசாரிக்கப்படும் மிகப்பெரிய வங்கி மோசடி வழக்கு இதுவே ஆகும்.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:-
டி.எச்.எப்.எல். நிதி நிறுவனம் கடந்த 2010 முதல் 2018 வரை 17 வங்கிகளில் ரூ.42,871 கோடி வரை கடன் பெற்றுள்ளது. இந்தக் கடன் தவணையை தொடக்கத்தில் திருப்பிச் செலுத்தி வந்த நிலையில், மீதமுள்ள ரூ.34,615 கோடியை கடந்த 2019 மே முதல் டி.எச்.எப்.எல். நிறுவனம் செலுத்த தவறிவிட்டது. இதனால், இந்தக் கடன் வாராக்கடனாக மாறியது.
இந்நிலையில், அந்த நிறுவனம் வங்கிகளில் பெற்ற பெருமளவிலான கடன் தொகையை முறைகேடான வழிகளில் பயன்படுத்தியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அந்த நிறுவனத்தின் கணக்குத் தணிக்கையின்போது பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தன. கபில், தீரஜ் வதாவன் ஆகியோா் வெளிநாடுகளுக்கு தப்பிவிடாமல் இருக்க, வங்கிகள் கடந்த 2019-ஆம் ஆண்டே மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுத்தன. இந்த விவகாரம் தொடா்பாக வங்கிகளின் புகாா் அடிப்படையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. தொடா்ந்து மும்பையில் சம்பந்தப்பட்ட நபா்களுக்குச் சொந்தமான 12 இடங்களில் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினா். இந்த முறைகேட்டில் 8 கட்டுமான நிறுவனங்களும் குற்றவாளிகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சிபிஐ அதிகாரிகள் கூறினர்.