“எளிய மக்கள் பொது நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியதன் தேவைகளைக் கருத்தில் கொண்டு, தியாகராய நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கம், செனாய் நகர் அம்மா அரங்கம் ஆகியவற்றை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
சென்னையில் சைதாப்பேட்டை, வியாசர்பாடி , திரு.வி.க. நகர் உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான செயற்கை புல்தரை கால்பந்து விளையாட்டுத் திடல்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை, பாமக உள்ளிட்ட அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு மாநகராட்சி திரும்பப் பெற்றிருக்கிறது. சென்னை மாநகராட்சி அதன் முடிவை திரும்பப் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனாலும், மாநகராட்சியின் முடிவு முழுமையானதாக இல்லை.
கால்பந்து திடல்கள் மட்டும் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவது தவிர்க்கப்பட்டால் மட்டும் போதாது. ஏற்கெனவே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான டென்னிஸ் திடல், பேட்மிண்டன் திடல் , ஸ்கேட்டிங் மைதானம், டேபிள் டென்னிஸ் மைதானங்கள் போன்றவையும் உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும்.
விளையாட்டுத் திடல்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதை விட அதிர்ச்சியளிக்கும் செயல், தியாகராய நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கம், செனாய் நகர் அம்மா அரங்கம் ஆகியவை தனியாருக்கு தாரை வார்க்கப்படுவது தான். மாநகராட்சியின் இந்த நடவடிக்கையால் தியாகராயர் அரங்கத்தை 24 மணி நேரம் பயன்படுத்துவதற்கான வாடகை இப்போதுள்ள ரூ.20,650-லிருந்து ரூ.59,000 ஆக உயர்த்தப்படும். அம்மா அரங்கத்தின் வாடகை ரூ.3.40 லட்சத்திலிருந்து ரூ.5.40 லட்சமாக உயர்த்தப்படும். எளிய மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் அரங்குகளின் வாடகை மும்மடங்கு அளவுக்கு உயர்த்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தியாகராயர் அரங்கில் சில ஆயிரம் ரூபாய் செலவில் 3 மணி நேரத்துக்கான நூல் வெளியீடு உள்ளிட்ட இலக்கிய நிகழ்ச்சிகளை எளிய மனிதர்களாலும் நடத்தி விட முடியும். மாறாக, ரூ.59,000 செலுத்தி தான் நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என்றால் அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். எனவே, எளிய மக்கள் பொது நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியதன் தேவைகளைக் கருத்தில் கொண்டு, தியாகராய நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கம், செனாய் நகர் அம்மா அரங்கம் ஆகியவற்றை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.