புதுச்சேரி பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது: முதல்வர் ரங்கசாமி!

புதுச்சேரி மாநிலம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது என்பதை பெருமையோடு குறிப்பிடுகிறேன் என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி விடுதலை நாள் விழா இன்று (நவ.1) கடற்கரை சாலை காந்தி திடலில் கொண்டாடப்பட்டது. முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கொட்டும் மழையில் நடந்து சென்று போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து அவர் விடுதலை நாள் உரையாற்றியதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் அனைத்தும் உடனடியாக பயனாளிகளைச் சென்றடைகின்றன. அந்த வகையில் புதுச்சேரி மாநிலம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது என்பதை பெருமையோடு குறிப்பிடுகிறேன்.

புதுச்சேரி அரசானது 16 துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் 142 நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு நேரடி பயன் பரிமாற்றத்தின்கீழ் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தி வருகிறது. 98.64 விழுக்காடு பயனாளிகளின் வங்கிக் கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு உரிய நபர்களுக்கு பயன் நேரடியாக சென்றடைகிறது. கடந்த 2023-24-ம் நிதியாண்டில் ரூ.796.82 கோடி நேரடியாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. உழவுத் தொழிலை நவீன தொழில்நுப்பம் மூலம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு அவர்கள் வாங்கிய கடன் தொகை, வட்டி அபராத வட்டி ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. நகரமயமாக்கல் காரணமாக சாகுபடி நிலங்களின் பரப்பளவு குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, பயன்பாட்டினைக் குறைக்கவும், பசுக்களுக்கு பசுந்தீவனம் தண்ணீர் கொடுப்பதை ஊக்குவிக்கவும் புதுச்சேரியில் ‘ஹைட்ரோபோனிக் விவசாயம்’ அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

நூறு விழுக்காடு மானியத்தில் 120 விவசாயிகளுக்கு ரூ.72 லட்சம் செலவில் குச்சி தீவனம் தயாரிக்கும் இயந்திரமும், 1,500 நபர்களுக்கு 75 விழுக்காடு மானியத்தில் ரூ.3.50 கோடி செலவில் 18 வார வயதுடைய முட்டையிடும் பெட்டைக்கோழியும் (20 கோழி, அதறகான கூண்டு மற்றும் தீவனம்) வழங்கப்பட உள்ளது. அதுபோல் கால்நடை வளர்ப்போருக்கு 100 பால் கறக்கும் இயந்திரம் நூறு விழுக்காடு மானியத்தில் ரூ.50 லட்சம் செலவில் வழங்கப்பட உள்ளன.

அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து இன்று வரை பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக ரூ.124.76 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் முதல்வரின் அரவணைப்புத் திட்டத்தின்கீழ் இதுவரை 2,500 பெண் குழந்தைகளின் பெயரில் தலா ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 1,020 பெண் குழந்களின் பெயரில் வைப்பு நிதி வழங்குவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ.1000 வழங்கும் திட்டத்தில் சுமார் 70 ஆயிரம் பேருக்கு மாதந்தோறும் 1000 செலுத்தப்பட்டு வருகிறது. 2023-24 நிதியாண்டில் ரூ.36.32 கோடி இதற்காக செலவிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.25 கோடி செலவிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் குழந்தைகள் உதவி மையம் அமைக்கப்பட உள்ளது. இணையக் குற்றங்கள் மற்றும் சுரண்டல்களிலிருந்து குழந்தைகளின் பாதுகாப்பிற்கான உரிமையை உறுதி செய்வதற்காக, இளைஞர், குழந்தை தலைமைத்துவத்திற்கான அறக்கட்டளையுடன் (TYCL) இணைந்து “குழந்தைகள் பாதுகாப்பு இணையவழி” என்ற புதுமையான திட்டம் செயலாக்கத்தில் உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையில் ரூ.1000 கூடுதலாக உயர்த்தி கடந்த அக்டோபர் மாத முன்தேதியிட்டு இந்த நவம்பர் மாதம் முதல் சேர்த்து வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 21,329 பயனாளிகள் பயன்பெறுவர். மத்திய அரசின் 100 விழுக்காடு நிதி உதவியுடன் புதுச்சேரி மீன்பிடி துறைமுகம் மேம்படுத்தும் பணி ரூ.15.63 கோடியில் நடந்து வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மீனவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்துவதற்காக ‘திஷா’ அறக்கட்டளை மூலம் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கலந்துரையாடல் வாயிலாக நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தி வருவதன் மூலம் அனைவருமக்கும் தரமான மருத்துவ சேவையை அரசு வழங்கி வருகிறது. இதனால் மருத்துவ சேவையில் நாம் தொடர்ந்து மன்னிலை வகித்து வருகிறோம்.

புதுச்சேரி பொதுப்பணித்துறையின் மூலமாக ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் நகரப்பகுதிகளை மேம்படுத்த, உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் ரூ.4,750 கோடிக்கு மதிப்பீடு செய்யப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 50 எம்எல்டி கொள்ளளவு உள்ள கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் இரண்டு அமைக்கப்படவுள்ளது.

புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களுக்கும் நல்ல சுத்தமான குடிநீர், கழிவுநீர் வசதிகள், தற்போதுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல், மரப்பாலத்திலிருந்து அரியாங்குப்பம் வரை மேம்பாலம் அமைத்தல், கொம்யூன் பஞ்சாயத்து கிராமங்களை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைத்தல், சாலைகளை மேம்படுத்துதல், உப்பனாறு, பெரிய வாய்க்கால்களை மேம்படுத்துதல், வாகன நிறுத்த வசதிகள் ஆகியவை அமைத்துத் தரப்படும்.

தமிழக அரசுடன், 2007-ல் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி தமிழக அரசிடம் சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் கோரப்பட்டு அதை சுத்திகரித்து விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதி உதவியுடன் புதுச்சேரியில் உள்ள பிரதான ஏரிகளை ஆழப்படுத்தி இந்த நீர் சேமிக்கப்படவுள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி WAPCOS என்ற பொதுத்துறை நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளது. தற்போது நிலுவையில் உள்ள ஏஎப்டி திட்டத்தின் மூலம் அனைத்து ஏரிகளிலும், சங்கராபரணி, தென்பெண்ணையாறுகளிலும் மழை நீரை சேமித்து, நீரை சுத்திகரித்து குடிநீர் விநியோகம் செய்ய ஆவனசெய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி அமைதியான மாநிலம் என்பதை நிலைநிறுத்தும் வகையில், சட்டம்-ஒழுங்கு தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. குற்றங்கள் நடைபெறுவது வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பொதுமக்களிடையே வேண்டிய விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக சாலை விபத்துகளும் பெருமளவில் குறைந்துள்ளன.

உலக அளவில் விரும்பப்படும் சுற்றுலா நகரமாக புதுச்சேரி உருவெடுத்துள்ளது. அண்மையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ள உலக சுற்றுலா பயணப் பட்டியலில் வரும் 2025-ம் ஆண்டுக்கான சிறந்த பயண இடங்களில் புதுச்சேரி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது பெருமை அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ. ஜெயக்குமார், சாய் ஜெ சரவணன்குமார், சட்டப்பேரைவ துணைத் தலைவர் ராஜவேலு மற்றும் எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.